சம்பளம் 20 ஆயிரம் எங்கே? 7 மாத நிலுவை தொகை, தீபாவளி போனஸ் கிடையாதா? கோவை பல்கலையில் ஒலித்த குரல்கள்
கோவை: பாரதியார் பல்கலைக் கழக ஒப்பந்த தொழிலாளர்கள், கடந்த 7 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய தொகையையும் தீபாவளி முன்பணத்தையும் வழங்காத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததோடு, நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் தீபாவளி முன்பணம் வழங்கி ஒப்பந்த ஊழியர்களை புறக்கணித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மின் துறை ஊழியர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஊதியம் நிலுவை
இவர்களுக்கு கடந்த 7 மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது... இதேபோல 6 மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் பணி நியமன ஆணையும் வழங்காததால் இப்பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் கடந்த மே மாதம் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
7 மாத நிலுவைத் தொகை
இதையடுத்து, பல்கலைக் கழகத்தின் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 26.8.2025 அன்று பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர்களுக்கு சட்டப்படி, நியாயமான 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி பதிவாளருக்கு கடிதம் வழங்கியிருக்கிறார்கள்.. இதையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்துள்ளனர்.. ஆனாலும், ஏழு மாத நிலுவைத் தொகை வழங்கப்படவில்லையாம்.
பல்கலைக் கழகத்தின் நிதி குழு மற்றும் ஆட்சி குழு அன்றைய உயர் கல்வித் துறை செயலாளர் ஒப்புதல் அளித்தும், பொங்கல் சிறப்பு நிதி ஊதியம் ஆயிரம் கொடுக்காமல், வஞ்சித்து வருவதால், இது குறித்து துணைவேந்தர், பதிவாளரிடம் தெரிவித்துள்ளனர்.. அப்போதும் எந்த விதமான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லையாம்.
கடந்த ஒரு வாரத்திற்கு முழு நேர பதிவாளர் ராஜவேல் பேசும்போது, 6.10.2025 திங்கட்கிழமைக்குள் பொங்கல் ஊதியம், நிலுவைத் தொகை, தீபாவளி முன்பணம் ஆகிய நியாயமான கோரிக்கைகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.. இதனை ஒப்பந்த ஊழியர்கள் மலைபோல் நம்பி காத்திருந்தார்களாம்.
நிரந்தர பணியாளர்கள்
ஆனால், இன்று வந்த அறிக்கையில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ரூபாய் 20,000 தீபாவளி பண்டிகை முன்பணம் கொடுக்கப்படும் என்றும், அதனை பல்கலைக் கழகம் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனுப்புங்கள் என்றும், வருகிற 13.10.2025 தேதிக்குள் அனுப்புமாறு சுற்று அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறதாம். இதனால் ஒப்பந்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "இது தொழிலாளர்களை ஏமாற்றும் செயல், முறைப்படி பதிவாளரிடம் கடிதம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை..
அதை பற்றி கேட்டால், "நிதி இல்லை.. எப்படி கொடுக்க முடியும்" என்று அலட்சியமாக சொல்கிறார்.. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் 20,000 சம்பளம் தரமுடியாதவர்கள் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கு கொடுக்க முடிகிறது? என்று கேட்டோம்.
அதற்கு பொறுப்பு துணை பதிவாளர், "எனக்கு ஒன்றும் தெரியாது செயலாளருக்கு மட்டும் தான் தெரியும், அவர் தான் அதற்கு பொறுப்பு" என்கிறார்..
அரசாணை - தமிழக அரசு
பாரதியார் பல்கலைக் கழகம் எப்படியாவது தமிழக முதல்வரை நல்லாட்சிக்கு கெட்ட பெயரை வாங்க கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நிதி அலுவலக அலுவலர்கள் தமிழக அரசு வழங்க அரசாணை பிறப்பித்தும், அதனை படிக்காமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை..
எதற்கெடுத்தாலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் நிதி இல்லை என்று சொல்கிறார்கள், அப்படியானால் அவர்களுக்கு மட்டும் எப்படி நிதி உள்ளது என்று தெரியவில்லை..
இது பல்கலைக் கழகமா? அல்லது தொழிலாளருக்கு விரோதம் செய்யும் கழகமா ? தொழிலாளர்களின் சட்டப்படி, நியாயப்படியான கோரிக்கையை வலியுறுத்தி அவசர பொதுக்குழுவில் முடிவு செய்து வருகிற வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் ஈடுபடுவது போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்" என்று கொதித்து கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications