மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் தி.மு.க., வேட்பாளர் கவிதாவுக்கு எதிராக, அதே கட்சியை சேர்ந்த டி.ஆர். சண்முகசுந்தரம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக கவிதா கல்யாணசுந்தரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கவிதாவுக்கு டிக்
கடந்த 2021 தேர்தலில் மேட்டுப்பாளையம் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம், இந்தமுறையும் தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். தொகுதி முழுவதும் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள் வழங்கி, பரிசுகளை இறக்கி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார். தலைமை கவிதாவை டிக் அடித்ததால், சண்முகசுந்தரம் நொந்து போனார்.
சீட் கிடைக்காத வேதனையில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அவரை மக்கள் ஆறுதல்படுத்தும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. தி.மு.க., தலைமை மற்றும் வேட்பாளர் கவிதாவுக்கு எதிராக சண்முகசுந்தரத்தின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கவிதாவை தோற்கடிக்க சண்முகசுந்தரம் சுயேச்சையாக போட்டியிட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
அதிமுகவினர் சூழ்ச்சி
இதுகுறித்து டி.ஆர். சண்முசுந்தரம் கூறுகையில், தொகுதி முழுவதும் வீடு வீடாக ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியுள்ளேன். எதிர்க்கட்சியினர் கூட நான் தான் வேட்பாளர் என முடிவு செய்திருந்தனர். எனக்கு சீட் வழங்காததை மக்கள் ஏற்கவில்லை. இப்போதும் வீடு தேடி வந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மக்களிடம் பேசி வருகிறேன்.
தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவிதாவின் கணவர் கல்யாணசுந்தரத்தை அரசியலுக்கு கொண்டு வந்ததே நான் தான். கடந்த 2021 தேர்தலில் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தபோது கல்யாணசுந்தரம் மற்றும் அவரின் மனைவி கவிதா வேலை செய்யவில்லை. நான் அவர்களின் வீடு தேடி சென்ற போது கூட கதவை அடைத்துவிட்டனர். அ.தி.மு.க., வேட்பாளருடன் இணைந்து சூழ்ச்சி செய்து என்னை தோற்கடித்தனர். அவர்களுக்கு எப்படி நான் வேலை செய்ய முடியும்.
இறுதி முடிவு
என்னைவிட தகுதியான வேட்பாளராக இருந்தால், நான் எந்த மனக்கசப்பும் இல்லாமல் வேலை செய்திருப்பேன். இப்போது சுயேச்சையாக போட்டிடுகிறேனா என்றும் சொல்ல முடியாது. சுயேச்சையாக போட்டி இல்லை என்றும் சொல்ல முடியாது. மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார்.
ராஜினாமா
இந்நிலையில், டிஆர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குவு உறுப்பினர் பதவி வகித்து வருகிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக நான் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சுயேட்சை வேட்பாளர்
இதைத்தொடர்ந்து, டி ஆர் சண்முக சுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்கா வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications