நண்பர்கள் தருகிறார்களா? வீடு வாடகை மட்டுமே ரூ.3.45 லட்சமாமே.. அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் 'சுளீர்'
கோவை: திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது சொத்து குறித்தும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் வெளியிட்ட தகவல்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீதும் திமுக தலைவர்கள் மீதும் தொடர்ந்து விமர்சனம் வைத்து வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இப்படி இருக்கையில்தான் அவர் கட்டியிருந்த வாட்ச் குறித்த தகவல்கள் பேசு பொருளாகின. அதாவது இந்த வாட்ச் வெளிநாட்டு நிறுவனத்தினுடையது என்றும், பல லட்சம் மதிப்பிருக்கும் எனவும் சொல்லப்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "இது ரஃபேல் விமானத்தின் பாகங்களை கொண்டு செய்யப்பட்ட வாட்ச். உலகம் முழுவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கிடைக்கும்" என்று கூறினார்.

கொஞ்சம் நிலம், சில ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு ரஃபேல் நிறுவனத்தின் வாட்ச் எங்கிருந்து கிடைத்தது? வாட்ச் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இதை வாங்கியதற்கான பில்லை அண்ணாமலை வெளியிடுவாரா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பினார். இதுதான் ஒட்டுமொத்த சலசலப்புக்கான தொடக்கப்புள்ளி. இதன் பின்னர் அண்ணாமலைvsஅமைச்சர் செந்தில் பாலாஜி என இருவருக்குள்ளும் வார்த்தைப்போர் வெடித்தது.
பின்னர் ஏப்ரல் 14ம் தேதி வாட்ச் வாங்கியதற்கான பில் மற்றும் திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இது குறித்து டிவிட்டரில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டு, ஏப்.14 காலை 10.15 மணிக்கு 'திமுக ஃபைல்ஸ்' வெளியிடப்படும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியதை போலவே வாட்ச் வாங்கியதற்கான பில் மற்றும் மேற்குறிப்பிட்ட திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் ஆகியவற்றுடன் தன்னுடைய சொத்து பட்டியலையும் வெளியிட்டார். அப்போது பேசிய அண்ணாமலை, தான் குடியிருக்கும் வீடு, தனக்கான பணத் தேவை ஆகியவை நண்பர்கள் கொடுத்து உதவி செய்கிறார்கள் என்று கூறினார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளான நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "அண்ணாமலை காண்பித்த பில்லை மனசாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த எக்ஸ்.எல் ஷீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவும் கிடையாது எல்லாம் நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை மட்டும் மாதம் ரூ.3.45 லட்சம். இவ்வளவு பெரிய தொகையை மாதம் மாதம் யார் கொடுக்கிறார்கள்? பணம் வார் ரூமிலிருந்து வருகிறதா? வார் ரூம்தான் அவரது நண்பரா? எனவே யார் இவருக்கு செலவு செய்கிறார்கள் என்கிற பட்டியலையும் அவர் வெளியிட வேண்டும்.

இவர் கூறிய சில விஷயங்களில் முரண்பாடு இருக்கிறது. அதாவது ரூ.4.5 லட்சத்திற்கு வாட்ச் வேறு ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது என்றும், அதை தான் ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாகவும் கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது. வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார். வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார். பரிசாக கொடுத்தார்கள் என்று சொல்வதில் என்ன தயக்கம்? மறுபுறம் அவர் வெளியிட்ட பட்டியலில் எதுவுமே கிடையாது. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
இப்படி மற்றவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு தான் தூய்மை என்று கூறுகிறீர்களே பின்ன ஏன் அடுத்தவன் சொத்தில் வாழ்கிறீர்கள்? என்னை பற்றியும் அவர் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார். எனவே இது குறித்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications