கொங்கு மண்டலம் அதிமுககிட்ட இருக்கு! அதான் கோவை மெட்ரோ வரக் கூடாதுனு திமுக சதி! நயினார் குற்றச்சாட்டு
நெல்லை: கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரக் கூடாது என்பதற்காக திமுக அரசு குறைவான தகவல்களை திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை. அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை பகுதிக்கு கொண்டு வரக் கூடாது என திமுக திட்டமிட்டுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மறுக்கவில்லை.
திட்டத்திற்கான விரிவான அறிக்கையை திருப்பி அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைவான தகவல்களை திமுக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக வசம் உள்ளதால் திமுக அரசு வேண்டுமென்றே திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க போதிய இடவசதியை பெற்றுத் தருவதாக தமிழக அரசு கூறவில்லை.
கோவை ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் தூரம் குறைவாக இருக்கிறது. குறைந்தபட்சம் 22 மீட்டர் தூரமாவது இருக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக ஆர்ப்பாட்டம் செய்து கருப்பு கொடியை காட்டுகிறார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
அது போல் மெட்ரோ திட்டம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மெட்ரோ இரயில் குறித்து வதந்திகளைப் பரப்பி மீண்டும் மீண்டும் அரசியல் செய்யும் மாண்புமிகு முதல்வர் திரு.
@mkstalin
அவர்களே!
திடீரென கோவை மற்றும் மதுரை மெட்ரோ மீது அதீத அக்கறையைக் காட்டும் நீங்கள், முதலில் தங்களது திமுக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் (DPR) உள்ள கூறுகளை முழுவதுமாக படித்தறிந்தீர்களா?
1. கோவை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கையில், ஏற்கனவே தற்போது இருக்கும் பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரோ இரயில் திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று காட்டப்பட்டுள்ளது.
2. திமுக அரசு அனுப்பிய DPR-இல் 14 ஆண்டுகளுக்கு முன்னருள்ள 2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-இன் உத்தேச மக்கள்தொகை ஏன் குறிப்பிடப்படவில்லை?
3. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட Comprehensive Mobility Plan-இல், மதுரையில் உள்ள தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு BRTS (Bus Rapid Transit System)-ஏ போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4. இது போதாததற்கு, கோவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ள மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தினால், அதிக அளவில் பொதுமக்களின் சொத்துகள் இடிக்கப்பட நேரிடும். இந்த லட்சணத்தில் தான் தாங்கள் சமர்ப்பித்துள்ள திட்ட அறிக்கை உள்ளது.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் மெட்ரோ அறிக்கையில் பல தவறுகள் இருப்பதைத் தாண்டி, மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட முன்வரவில்லை. இனியாவது தங்களது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோவைக் கையிலெடுப்பதை நிறுத்துங்கள் முதல்வரே! அது தான் ஒரு நல்ல முதல்வருக்கு அழகு மட்டுமல்ல, பொறுப்பும் கூட! இவ்வாறு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications