தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்காது! மத்திய அரசே சொல்லிட்டாங்க! ஸ்டாலினுக்கு என்ன? இபிஎஸ் கேள்வி
கோவை: நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் அம்மன் அர்ச்சுணன், வானதி சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயராம் உள்ளிட்டோரை ஆதரித்து அவர் பேசினார்.

அப்போது அவர் திமுகவை கடுமையாக எதிர்த்தார். மேலும் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் தொகுதி மறுவரையறை பாதிக்காது என தெளிவாக கூறியும் ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார்.
பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை தடுக்க முயற்சிக்கிறார். தொகுதி மறுவரையறையை கண்டித்து தமிழகத்தில் இன்று கருப்புக் கொடி போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நான் எங்கும் கருப்புக் கொடியை பார்க்கவில்லை. ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது.
அதிமுகவை பற்றி பேச முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு என்ன தகுதி இருக்கிறது, நிதி அமைச்சராக இருந்த அவர் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார்.
திமுக கூட்டணியின் 39 எம்பிக்களும் பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து என்ன கொண்டு வந்தார். எல்லாம் பில்டப், கபட நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் நான்கு அல்லது ஐந்து முனைப் போட்டி அல்ல; இது இரு முனைப் போட்டிதான் என்று தெளிவுபடுத்தினார். ஒருபுறம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், மறுபுறம் அதிமுக என்ற பாஜகவின் இந்துத்துவா கட்சியும் களத்தில் நிற்பதாகச் சுட்டிக்காட்டினார்.
ஓராண்டுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என அதிமுக கூறிய முந்தைய நிலைப்பாட்டை சிதம்பரம் நினைவுபடுத்தினார். ஆனால், தற்போது அனைவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். பாஜக இந்தி, இந்துத்துவாவை திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவது அந்தத் திணிப்பின் ஒரு பகுதிதான் என்றார்.
தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை விட, சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கும், இந்தி மொழிக்கு பல நூறு மடங்கும் அதிக நிதி ஒதுக்கப்படுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டினார். இது மொழிகளின் மீதான பாரபட்சமே என்றார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது எனத் தெரிவித்த அவர், பாஜக அரசு கொண்டு வரும் திருத்தம் "மோசடி" என்று சாடினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா பொம்மை போல பின்னால் இருந்து இயக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பழனிசாமி ஒரு "மோசமான அடிமைத்தனம்" எனக் குறிப்பிட்ட சிதம்பரம், முக்கிய தேசியப் பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல், அடிமைச் சாசனத்தை எழுதிக் கொடுத்து விட்டார் எனக் குற்றஞ்சாட்டினார். "தேசிய முற்போக்குக் கூட்டணிக்கும் அதிமுகவிற்கும் போட்டி போல் தோன்றினாலும், உண்மையில் நமக்கும் பாஜகவிற்கும் தான் போட்டி" என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேச மசோதா என 3 மசோதாவையும் மக்களவையில் தாக்கல் செய்தனர். இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நாளை மாலை 4 மணி வரை விவாதம் நடத்தலாம் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications