ட்விஸ்ட்! கொள்ளை போனது ரூ. 1.5 கோடியே இல்லை.. பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!
கோவை: அன்னூர் அருகே பாஜக நிர்வாகி விஜயகுமார் வீட்டில் ரூபாய் 1.5 கோடி கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தில், பொய் புகார் அளித்ததாக பாஜக நிர்வாகி விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக நிர்வாகியான இவர், கார் வாட்டர் வாஷ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் வைத்திருந்த 1.5 கோடி பணம் கொள்ளை போனதாக புகார் அளித்தார் விஜயகுமார்.

புதிதாக இடம் ஒன்று வாங்குவதற்காக, ரூ.1.50 கோடி பணத்தை தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்து வைத்திருந்ததாகவும், இதைத் தொடர்ந்து விஜயகுமார் மே 18ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, அன்னூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு இடம் வாங்குவது தொடர்பான ஆவண நடைமுறைகளை முடித்துவிட்டு, பணம் எடுப்பதற்காக சொக்கம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது வீட்டின் முன்பக்க கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவு திறந்து கிடந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கலைந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தான் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடி உள்ளதா என பார்த்தபோது, அந்த பணம் இல்லாதது தெரியவந்ததாக புகாரில் கூறினார்.
நிலம் வாங்குவதற்காக விஜயகுமார் வீட்டில் வைத்திருந்த ரூ.1.50 கோடி பணம் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீசில் புகார் அளித்தார் விஜயகுமார். அதன் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விஜயகுமார் வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகள், தடயங்களை போலீச்ர் சேகரித்தனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 1.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதன் உரிமையாளரான பாஜக நிர்வாகி விஜயகுமார் மீதே போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பியது.
ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜயகுமார் வீட்டில் கொள்ளை போனது ரூபாய் 18 லட்சம் தான் என போலீசார் கண்டுபிடித்தனர்.
கொள்ளையடித்த நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டறிந்தனர். விஜயகுமார் வீட்டில் கொள்ளை அடித்தது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அன்பரசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 18.5 லட்சம் பணம் மற்றும் 9 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, விஜயகுமாரிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், கொள்ளை போனது 18 லட்சம் மற்றும் 9 சவரன் நகை மட்டுமே என்பதை விஜயகுமார் ஒப்புக்கொண்டார். பெரிய தொகை கொள்ளை போனதாக சொன்னால் தான் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என கருதி பொய் புகார் அளித்ததாக விஜயகுமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். கொள்ளை போனது தொடர்பாக பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications