பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. 9 குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமா? வழக்கறிஞர் சொன்ன பாயிண்ட்!
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறுகையில், குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றாலும், சாட்சியங்கள் பலமாக இருப்பதால், இதே தண்டனை மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோருடன் நட்புடன் பழகி, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி வந்தது. அதுமட்டுமல்லாமல் வீடியோக்களை வைத்து மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு தனது தந்தை மற்றும் சகோதரருடன் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்தது. இதன்பின் வழக்கு சிபிசிஐடி வசமும், அதனை தொடர்ந்து சிபிஐ வசமும் சென்றது. சுமார் 6 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், இன்று கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த 9 குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இருந்தாலும், குற்றவாளிகள் மேல்முறையீடு சென்றால், அவர்களின் தண்டனை குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வாய்மொழி மற்றும் மின்னணு சாட்சிகள் இரண்டையும் சமர்ப்பித்துள்ளோம். பறிமுதல் செய்த அத்தனை ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதுதான் சட்டம். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தில் சாட்சிகள் பலமாக உள்ளது. மேல்முறையீடு சென்றால், இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications