பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பேசவே பயந்த பெண்களிடம் வாக்குமூலம் பெற்ற சிபிஐ இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள்
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி வாக்குமூலம் பெற்று அதனை நீதிமன்றத்தில் நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளது சிபிஐ. சிபிஐ ஆய்வாளர் பச்சையம்மாள், இந்த வழக்கில் இருந்த சவால்கள் பற்றிப் பேசி இருக்கிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில், பாதிக்கப்பட்ட பெண்கள் கத்திக் கதறியது தமிழகத்தையே உலுக்கியது.

ஆயுள் தண்டனை
இதுதொடர்பாக சிபிஐ விரிவான விசாரணை நடத்தி சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்தது. அவர்கள் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 2019-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பளித்தது. அப்போது சிபிஐ தரப்பில் வீடியோ ஆதாரங்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களும் தைரியமாக சாட்சி அளித்திருந்தனர். அறிவியல் ரீதியாகவும் சாட்சியம் நிரூபணமான நிலையில், வீடியோ எடுக்கப்பட்ட தேதி, இடம் என அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியானது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசு தரப்பில் 48 பேர் சாட்சி அளித்தனர். அதில், பிறழ் சாட்சியே இல்லை. இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணமானதால், 8 பெண்களையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். 9 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்
காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் தலைமையில் சிறப்பு எஸ்ஐ உட்பட 7 பேர் கொண்ட அணி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆதாரங்களைத் திரட்டி, குற்றங்களை நிரூபிப்பதற்கு உதவியாக இருந்தது. விசாரணையை துவங்கியபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் தயக்கம் வழக்கு விசாரணைக்கு பெரும் தடையாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் பலரிடமும் பேசி, அவர்களை வாக்குமூலம் கொடுக்க சம்மதிக்க வைத்தது.
பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காண்பதே கடினமாக இருந்த போது, வெளியான வீடியோக்கள் உதவின. வீடியோவை வைத்து பெண்களை அடையாளம் கண்டு விட்டாலும் யாருமே பேச முன்வரவில்லை என்று கூறியுள்ளார் வழக்கில் சிபிஐக்காக பிரதான விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர் பச்சையம்மாள்.
பயந்தனர்
வழக்கை சிபிஐ எடுத்தபின், 2 ஆண்டுகள் கொரோனா காலகட்டம் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திப்பதும், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதும் பெரும் கஷ்டமாக இருந்தது. சிலருடைய வீடியோக்கள் வெளியாகிவிட்டதால், நமது வீடியோவும் வந்து விடுமோ என்று பலரும் பேசவே பயந்தனர். இதற்காக ரகசிய அணியாக நாங்கள் களம் இறங்கினோம். பெற்றோர், பக்கத்துவீட்டார் யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்களை சந்தித்து பேசினோம் எனத் தெரிவித்துள்ளார் சிபிஐ ஆய்வாளர் பச்சையம்மாள்.
8 பேர் மட்டுமே
மின்னணு சாதனங்கள் முக்கிய ஆதாரங்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. எந்த வகையிலும் உங்களுக்கு பாதிப்பு வராது என்ற உறுதியை நாங்கள் அளித்ததை அடுத்து 8 பெண்கள் புகார் அளிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களால் விசாரணைக்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு தெரியாமலேயே விசாரணையை மேற்கொண்டோம். நீதிமன்றத்திற்கு அவர்களை அழைத்து வந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கிய பின்பே, அவர்கள் தங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, துணிச்சலாக வாக்குமூலம் கொடுக்க முன் வந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சந்தித்துப் பேசிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் தான் வாக்குமூலம் தர ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications