கோவைக்கே குட்நியூஸ்.. போத்தனூர் ரயில் நிலையம்.. தெற்கு ரயில்வே எடுத்த மேஜர் முடிவு
கோவை: கோவையில் உள்ள போத்தனூர் ரயில் நிலையம் ரூ.24 கோடியில் புதுப்பொலிவு பெறப்போகிறது. அங்கு எஸ்கலேட்டர், லிப்ட், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ள கோவையில் கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான ரயில் நிலையமாக போத்தனூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த போத்தனூர் நிலையம் கடந்த 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் வந்து 9 ஆண்டுகளுக்கு பின்பே சென்னை ரயில் நிலையம் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

கேரளாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் போத்தனூர் ரயில் நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. சுமார் 50-க்கும் மேலான ரயில்கள் போத்தனூர் ரயில்நிலையம் வழியாக தினசரி செல்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் கேரள ரயில்கள் போத்தனூரை கடக்காமல் போக முடியாது.
இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரும் மேலும் பல ரயில்களை போத்தனூர் வழியாக இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவை ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூர் வழியாக போகப்போகிறதா என்பது தெரியவில்லை.. அதேநேரம் போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி பல்வேறு விரிவாக்கப் பணிகள் போத்தனூர் ரயில் நிலையத்தில் மேற்கோள்ளப்படுகிறது.
இதன்படி போத்தனூர் ரயில் நிலையம் நவீனமயமாக உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் மையம், எஸ்கலேட்டர், இலவச வைஃபை வசதி, சுற்றிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள், பழைய இருக்கைகளை மாற்றி நவீன இருக்கைகள் அமைப்பது, மக்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட பசுமையான பூங்கா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
இதுதவிர பார்க்கிங் பகுதிக்கான கான்கிரீட் தளங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் பார்க்கிங், நுழைவு முகப்பு தோற்றம், நடைமேம்பாலம், காத்திருப்பு அறைகள், கழிவறைகள் உள்ளிட்டவையும் புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தால் போத்தனூர் ரயில்நிலையம் சூப்பராக மாறிவிடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
போத்தனூர் ரயில் நிலையத்தில் தண்ணீர் ஏற்றும் வசதி, பிட்லைன், கோச் டெப்போ போன்ற வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் ரயில்களை நிறுத்தி அனைத்து வசதிகளையும் செய்வதற்கு பதில் அங்கு நிறுத்தி வேண்டிய வசதிகளை செய்து தரலாம் என்று யோசனைகளை பயணிகள் முன்வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications