எங்களுக்கு அறிவு இல்லாததை போல் கிண்டல் செய்கிறார்கள்.. பரிதாபங்கள் சேனல் மீது புகார் அளித்தது ஏன்?
கோவை: பரிதாபங்கள் சேனல் மீதும், கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் மீதும் புகார் அளித்தது ஏன் என்று வழக்கறிஞர் தனுஷ்கோடி தெரிவித்துள்ளார். பரிதாபங்கள் சேனலில் பல்வேறு சாதிய அமைப்புகளையும், பல அரசியல் தலைவர்களையும் நக்கல் செய்வதைப் போல் வீடியோ வெளியிட்டதால், தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை கவின் ஆணவக் கொலைக்குப் பின், தமிழ்நாடு முழுவதும் ஆணவக் கொலையை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியும், சுதாகரும் ஆணவக் கொலைக்கு எதிராக சொசைட்டி பாவங்கள் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில், அரசியல் தரப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பெற்று வரும் அந்த வீடியோவில் ஆணவக் கொலைக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
அதேபோல் ஆணவக் கொலைக்கு காரணமான சாதிவாதிகளையும் கிண்டல் செய்திருந்தனர். இந்த நிலையில் கோபி, சுதாகர் மற்றும் பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோபி, சுதாகர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தனுஷ்கோடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், பரிதாபங்கள் சேனலில் சொசைட்டி பாவங்கள் என்ற வீடியோவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை வேண்டுமென்றே தாக்குவதைப் போலும், அவப்பெயரை ஏற்படுத்துவதை போலவும் உருவாக்கி இருக்கிறார்கள்.
அந்த வீடியோ எங்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை வைத்து அதிகளவிலான மீம்ஸை உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், நெல்லை கவின் ஆணவக் கொலையைக் குறிப்பிட்டு, நீ மிளகாய்ப் பொடியை தூவிட்டுதான வெட்டின.. அவனிடமும் ஒரு கத்தியைக் கொடுத்துக் கத்தி சண்டை போட வேண்டியது தான என்று கோபி சொல்கிறார். வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசுகிறார்.
மற்ற நபர்கள் பார்க்கும் போது இதெல்லாம் வீரமா என்ற விவாதத்தைத் தொடங்கி பிரச்சனையாக்குவது போல் பேசுகிறார்கள். அதனை உடனே தடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம். இந்த வீடியோவை உடனடியாக டெலீட் செய்ய வெண்டும். சமூகப் பிரச்சனைகள் எதையும் ஆராயாமல் வன்முறை தூண்டக்கூடிய வகையில் செயல்படும் பரிதாபங்கள் சேனலை முடக்க வேண்டும்.
இது இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனை. இதனை இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாகச் சித்தரிக்கிறார்கள். தனிப்பட்ட விஷயத்தை ஒரு சமூகமே சாதி வெறியுடன் இருப்பது போல் சித்தரிக்கிறார்கள். காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நீதிமன்றத்தை நாடுவோம். பரிதாபங்கள் சேனலுக்கு சமூக அக்கறை எல்லாம் இல்லை.
அதிக பார்வையாளர்களுக்காக வீடியோ போடுகிறார்கள். சமூகத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறார்கள். சுயலாபத்துக்காகச் செய்கிற விஷயம். அந்த 2 குடும்பங்களும் மனவேதனையில் இருந்திருப்பார்கள். கோபி, சுதாகரின் கிரவுட் ஃபண்டிங் பற்றி பேசுவதில்லை. எங்கள் சாதியை மட்டப்படுத்துவதை போலவும், யாரும் படிப்பறிவு இல்லாததைப் போலவும், காட்டுமிராண்டியைப் போலவும் சித்தரிக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் நட்புடன் தான் பழகி வருகிறோம். பரிதாபங்கள் வீடியோவால் கிராமங்களில் வன்முறையாக மாறக்கூடும். இவர்கள் பல தலைவர்களையும், சாதிய அமைப்புகளையும் நக்கல் செய்கிறார்கள். அதனால் பரிதாபங்கள் சேனலையே முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications