கோவையில் யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்து ரிசார்ட்.. கலெக்டருக்கு பறந்த கோரிக்கை
கோவை: கோவை மாவட்டம், ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் சோமையனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட் மீது மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள வனப்பகுதிகளில் மற்றும் யானைகளின் வலசைப் பாதையில் ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாகக் கூறி சூழல் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனைக்கட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் ரிசார்ட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. டிடிசிபி ( அனுமதி, உள்ளுர் திட்டக் குழும அனுமதி, வனத்துறையின் தடையில்லா சான்று ஆகியவை இந்த ஆய்வில் சரிபார்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சில ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எட்டு ரிசார்ட்டுகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் 2 ரிசார்ட்டுகள் அனுமதி பெற்றுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இவற்றில், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் 2 ரிசார்ட்டுகளும் ஒரு மாதத்துக்கு முன்னர் அரசுத் துறைகளின் அனுமதியைப் பெற்றதாக மாவட்ட நிர்வாகம் கூறியது. அப்படியானால், அவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வாறு அனுமதி பெற்றதாக மாவட்ட நிர்வாகம் கூறிய ரிசார்ட்டுகளில் கோவை சோமையனூரில் இயங்கி வரும் தனியார் ரிசார்ட்டும் ஒன்று. 'இந்த ரிசார்ட் அனுமதி பெற்றதாகக் கூறப்படும் தேதியும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்த தேதிகளும் முரண்பாடாக உள்ளன' என அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடந்த 31.03.2021 ஆம் ஆண்டு வரையில் சோமையனூர் ரெசார்ட், பிரபல இந்தி நடிகரின் பெயரில் இருந்தது. அதன்பிறகு வேறுநபர்களுக்கு மாறிவிட்டது.
இந்த இடம் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி ஆகியவை 'மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின்' அதிகார வரம்புக்குள் வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
'இங்கு கட்டுமானத்தைத் தொடங்குவதற்குவேளாண்மைத் துறை, பொறியியல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வனத் துறை மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரிடமிருந்து 'தடையில்லா சான்றிதழ்' பெறப்பட வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல் சுமார் 4 ஏக்கரில் ரிசார்ட் கட்டுமானப் பணிகள் நடந்தது என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுதொடர்பாக, கடந்த 22.06.2022 அன்று, நஞ்சுண்டாபுரம் ஊராட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கட்டுமானப் பணிகள் டார்சாவில் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டதாக உள்ளாராம். அதன்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தனியார் ரெசார்ட்டில் தங்குமிடம், உணவகம், மாநாட்டு அரங்கம், மதுக்கூடம் (bar), 1300 நபர்கள் தங்கும் வகையில் பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் அனுமதி குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும் போது, "கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு தனியார் ரிசார்ட் குறித்து புகார் கடிதம் ஒன்று சென்றுள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. புகாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் பதில் அளித்த மாவட்ட வன அலுவலர், 'ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடத்துக்கு அனுமதி கோரி தனியார் நிறுவனம், மலைப்பகுதி பாதுகாப்பு (HACA) ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் எந்த அனுமதியையும் சோமையனூர் ரெசார்ட் பெறவில்லை. ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினர்.




Click it and Unblock the Notifications
