"நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்" - செங்கோட்டையன் திட்டவட்டம்
கோவை: "நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். எங்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த எவராலும் முடியாது. எங்களிடம் நியாயம் இருக்கு, நேர்மை இருக்கு. இந்த தலைவன் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம்" என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
தேவையற்ற விமர்சனங்களுக்கு நாங்கள் பேச விரும்பவில்லை எங்கள் லட்சியம் வேறு. வெற்றி இலக்கை நோக்கி செல்கிறோம். டெபாசிட் இழக்க விரும்பவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி அரங்கில் இங்கு நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் திருப்பூருக்கு பலமுறை வந்துள்ளேன். இங்குள்ள கூட்டத்தை பார்க்கும் போது திருப்பூர் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது தெரிகிறது. பல கட்சிகள் கூட்டம் கூட்டினால் இவ்வளவு கூட்டம் வராது. கூட்டம் வந்தாலும் இது போன்ற உத்வேகம் இருக்காது. வெற்றி நாயகன் தளபதியை யாராலும் வெல்ல முடியாது. தமிழகத்தை ஆளப்போகும் தலைவனை, வெற்றிக் கழகத்தை வெல்ல எவராலும் வீழ்த்த முடியாது.
ஆளை தேடித் தேடி வேட்பாளராக நிறுத்தியதை பார்த்துள்ளேன். ஆனால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். மே மாதத்திற்கு பிறகு தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும். விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. பொங்கலுக்கு பிறகு மாற்றம் தமிழகத்தில் உண்டாகும். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நாளையே தேர்தல் நடைபெற்றாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். எங்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த எவராலும் முடியாது. எங்களிடம் நியாயம் இருக்கு, நேர்மை இருக்கு. இந்த தலைவனை தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் வரையில் ஓயமாட்டோம். அனைவரும் சொன்னார்கள், செங்கோட்டையன் எங்கு சென்று சேர்ந்திருக்கிறார் என்று, நான் சேர்ந்துள்ள இடம் கோட்டைக்கு செல்லும் இடமாக உள்ளது.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பயணங்களை மேற்கொண்டேன். இரு தலைவர்களோடு பணியாற்றியதற்குப் பிறகு மூன்றாவது தலைவரோடு பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மனம் திறந்து பேசினார். விஜயுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், களப்பணி என்பது முக்கியமான ஒன்று.
அனைத்து இடங்களிலும் கழகத் தலைவருடைய புகழைப் மக்களே பரப்பி வருகின்றனர். எப்போது தேர்தல் வரும் போகிறது நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. வேறு இயக்கமாக இருந்தால் தேடித்தேடி சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டிய நிலை இருக்கும். ஆனால் வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் தேர்தல் தேதியை சொல்லுங்கள் சின்னத்தை சொல்லுங்கள் என்கின்றனர். நேரடியாக விமானத்தில் செல்லுகின்ற இயக்கமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது" எனப் பேசியுள்ளார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications