“செந்தில் பாலாஜி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. தூக்கத்தை கெடுக்கிறார்”.. உச்சிமுகர்ந்த ஸ்டாலின்!
கோவை: கோவையில் நேற்று நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியை ஏகத்துக்கும் பாராட்டிப் பேசினார்.
"என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பெயரில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தையே மாபெரும் மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி. இவரது இந்த ஆற்றல்தான் எதிரிகள் பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. செந்தில் பாலாஜிக்கு அவர்கள் கொடுத்த குடைச்சல்களை வைத்தே இவர் எந்த அளவிற்கு எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதை உணரலாம்.
செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகள் மாதிரி வேறு யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். மிரட்டலுக்கு பயந்து முதுகு வளைந்து கும்பிடு போடுபவர்களுக்கு இடையே இவர் எந்த மிரட்டலுக்கும் பயந்து அடிபணியவில்லை! நெருக்கடிகளுக்கு தலைவணங்காமல், நெஞ்சுரத்தோடு எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கிறார்.
செந்தில் பாலாஜி கழகத்திற்கும், தலைமைக்கும் உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அந்தளவிற்குச் சிறப்பாகப் பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!" எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. அந்த வழக்கில் எந்தவித முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய பார்க்கிறார்கள். அவர்களின் மிரட்டல் அரட்டலுக்கு அஞ்ச நாங்கள் அடிமையும் இல்லை கோழையும் இல்லை. தைரியமாக எதிர்கொள்வோம்.
அதனால்தான், மக்கள் மட்டுமல்லாமல் பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய கூட்டணியில் இணைகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை குறைவதைத்தான் பார்த்திருக்கிறோம்! அந்த வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கூட்டணியின் பலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கவில்லை. யாரெல்லாம் பா.ஜ.க.வின் தமிழ் விரோத அரசியலை எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.
பா.ஜ.க.வின் டப்பா இஞ்சின் முன்பு, தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் இஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது, "தமிழ்நாடு அணியா டெல்லி அணியா" என்று சொல்லி பரப்புரை செய்கிறேன். இதில் வெற்றி பெறப்போவது நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தமிழ்நாடு அணிதான்! களத்தில் உழைப்போம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்" எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications