சூப்பர்.. மகிழ்ந்த திமுக தலைமை.. புதுசா பறந்து வந்த அசைன்மெண்ட்.. லிஸ்டுடன் ரெடியாகும் 'ஷாக்' அமைச்சர்
கொங்கு மண்டலத்தில் மாற்றுக்கட்சியின் முக்கிய தலைவர்களை திமுகவுக்கு கொண்டுவர செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமை அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறது.
கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 'ஹெவி எனர்ஜியை' கொடுத்திருக்கும் நிலையில், தற்போது பெரிய தலைகளுக்கு வலையை விரிக்க சொல்லி புது அசைன்மெண்டை கட்சி தலைமை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
67 எலஎல்ஏ சீட்கள், 11 எம்பி சீட்கள் என ஒரு பெரிய அரசியல் தளம்தான் கொங்கு மண்டலம். என்னதான் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இந்த கொங்கு மண்டலம் மட்டும் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கூட திமுக மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கொங்கு மண்டலத்தில் மண்ணை கவ்வியது. தற்போதுவரை திமுகவின் அப்செட்டுக்கு இதுதான் காரணம்.
எனவே இந்த தொகுதியில் திமுக அடுத்த தேர்தலில் பலம் வாய்ந்த கட்சியாக வளர வேண்டும் என்கிற அசைன்மென்ட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது. சும்மா எடுத்த உடனேயே அவரிடம் அசைன்மென்ட் கொடுக்கப்படவில்லை. இந்த வேலைக்கு அவர் ஒருவர்தான் முழுமையான தகுதி வாய்ந்தவர் என்பதை தெரிந்துதான் அவருக்கு இப்பணி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் அதிகம் நம்பப்படும் தலையாக இருந்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துகளை சத்தமே இல்லாமல் முடித்து வைத்தவர் இவர். இவரது பாணியும் இதுதான் என்றும் சொல்லலாம். அதிகம் பேசாமல் செயல்களில் ஈடுபாடு காட்டுவது செந்தில் பாலாஜியின் தனித்திறமை. எனவேதான் திமுக இவரை நம்பி இப்பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஒவ்வொரு முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வரும்போதெல்லாம் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெறும். அதுவும் 100,200 கணக்கில் இருக்காது. 5,000 முதல் 20,000 வரை இருக்கும். இதன் காரணமாகவே கட்சிக்குள்ளும் செந்தில் பாலாஜி மீது மதிப்பு ஏற்பட்டது.

புது அசைன்மென்ட்
அந்த வகையில் கொடுக்கப்பட்ட அசைன்மென்டை செந்தில் பாலாஜி சிறப்பாக செய்து வருவதாக முதலமைச்சர் காதுகளுக்கு தகவல்கள் செல்லவே அவர் திருப்தியடைந்துள்ளார். இதனையடுத்து இதைவிட பெரிய பொறுப்பு ஒன்று செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருக்கும் பெரும் புள்ளிகளை திமுகவில் இணைய வைப்பதுதான் அந்த அசைன்மென்ட். இதற்கு முன்னர் இணைந்தவர்கள் எல்லாம் கடைநிலை தொண்டர்கள். ஆனால் இது 'மாஜிக்கள்' தொடர்பான விவகாரம். எனவே செந்தில் பாலாஜியின் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப் இல்லாத மாஜிக்கள்
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை யார் வழிநடத்துவார்கள் என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி என்கிற தற்காலிக பதிலை நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் தனக்கு கிடைத்த இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் எடப்பாடி சாதூர்யமாக பயன்படுத்துவாரா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஏனெனில் அதிமுகவில் இருந்த பல முக்கிய தலைகள் தற்போது வெளியே இருக்கின்றன. மீதி உள்ளே இருக்கும் சில தலைகளும் ஈரோடு தேர்தல் விவகாரத்தையடுத்து அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மற்றொருபுறம் ஓபிஎஸ் தரப்பிலும் பெரியதாக கிரிப் ஏதும் இல்லாமல் பலர் சுற்றிக்கொண்டிருக்கிறார். இதற்கு சின்னம் கைமாறியதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

தளும்பல்
மூன்றாவதாக பாஜகவில் அண்ணாமலை தலைமையில் ஏற்கெனவே பல நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவியிருக்கிறார்கள். இப்படியாக கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் அனைத்துமே தளும்பிக்கொண்டிருப்பதால் யார் எப்போது வெளியே விழுவார்கள் என்று சொல்ல முடியாத நிலை உருவாகியிருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி 'மாஜிக்களை' மடைமாற்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுக்கிறதாம். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை என இருவரும் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே இவர்களின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்ய இதே சமூகத்தை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி தலைமை மேற்குறிப்பிட்ட அசைன்மென்டை கொடுத்திருக்கிறது.

உறுத்தல்
எதிர்பார்த்தபடி அசைன்மென்ட் சரியாக முடிக்கப்பட்டால் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் கோலோச்சும் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் 'மாஜிக்களை' தவிர்த்து, எதிர்தரப்பு சிட்டிங்' எம்எல்ஏக்களையும் வளைத்துப்போட அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் தயாராக இருக்கிறது என்பதுதான். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட எடப்பாடி மற்றும் பாஜக தரப்பினர், தங்கள் தரப்பு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க போகிறார்களாம்.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அபார வெற்றியை பெற முடியாத அளவுக்கு, கொங்கு மண்டலம் சறுக்கிவிட்ட நிலையில், இந்த முறையோ, இதே கொங்கு மண்டலம்தான், திமுகவின் அபார வெற்றிக்கு உதவ போவதாகவும் சொல்கிறார்கள்.. எனவேதான், கொங்குவில் பாஜகவும், எடப்பாடி டீமும் போட்டி போட்டுக் கொண்டு வியூகங்களை இப்போதே அமைக்க துவங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications