கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. . திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி இந்த முறை தொகுதி மாற்றப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம். கடந்த காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளதால் இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

senthil-balaji-senthil-balaji-to-contest-in-coimbatore-south-constituency

முதலில் மறுத்த செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், வரும் தேர்தலில் அவர் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. தெற்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து செந்தில் பாலாஜியே மறுத்திருந்தார். இதனால், திமுக வேட்பாளர் பட்டியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலஜியே கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் எஸ்பி வேலுமணி, அண்ணாமலை என முக்கிய நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுக சார்பில் வலுவான அதே சமயம் மக்களுக்குப் பரிட்சயமான நபரை களமிறக்க வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை கோவை தெற்கில் போட்டியிட தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தெற்கில் செந்தில் பாலாஜி

அதுமட்டுமல்லாமல் இந்தமுறை கரூரிலும் செந்தில் பாலாஜிக்கு அதிக எதிர்ப்புகள் இருப்பதால் கோவையில் போட்டியிட முடிவு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. அவர் தெற்கில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில், கோவை தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட திமுக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜியே நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த குறுஞ்செய்தியில், தனது செல்போன் எண்ணைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறும், எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தெற்குத் தொகுதி நிலவரம் குறித்தும் அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டு வருகிறார். சிறுபான்மை மக்கள் அதிகளவிலும், மற்ற சமுதாய மக்கள் சமஅளவிலும் இருப்பதால் தெற்குத் தொகுதியில் எளிமையாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டுள்ளார்.

திமுகவின் பலமான திட்டம்

2021 சட்டமன்ற தேர்தலில் மநீம தலைவர் கமல்ஹாசன் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகவும் குறுகிய வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். மாநகராட்சியின் 19 வார்டுகள் அடங்கிய சிறு தொகுதியாக உள்ளது. இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி 2 முறை போட்டியிருப்பதால் அவர்களும் இந்தமுறை தெற்கு தொகுதியை கேட்டனர். ஆனால் திமுக பலமான திட்டத்துடன் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மன் அர்ஜுனன் 2 முறை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

மேலும் அங்கு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். ஆனால் செந்தில் பாலாஜி தீவிரமான களப்பணி மூலம் அங்கு வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறார். கோவையில் அதிமுகவுக்கு எஸ்.பி. வேலுமணி, பாஜகவுக்கு அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் என்று பல முகங்கள் உள்ளன. ஆனால் திமுகவுக்கு அப்படி சொல்லிக் கொள்ளும்படியான முகங்கள் இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக செந்தில் பாலாஜியை நேரடியாக கோவையில் களமிறக்கியுள்ளனர்.

திமுக அரசின் முக்கியத் திட்டம்

ஏற்கனவே தெற்குத் தொகுதியில் திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் முக்கியத் திட்டங்களான செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம் இங்குதான் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் இருந்து வந்த திமுக நிர்வாகிகள் கோவையில் ஏராளமான வேலைகளைப் பார்த்தனர். அதேபோல, இந்த தேர்தலிலும் கரூர் திமுக நிர்வாகிகள் கோவையில் முகாமிட்டு செந்தில் பாலாஜியின் வெற்றிக்காக உழைப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வானதி சீனிவாசன் கடந்த ஐந்தாண்டுகளில் தெற்குத் தொகுதியில் பெரிதாக வேலை செய்யவில்லை என்பதால் அவர் மீது பொதுமக்களிடையே அதிருப்தியுள்ளது. அதேபோல, அம்மன் அர்ஜூனன் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி உள்ளது. இந்த வாய்ப்பை திமுக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வாக்குகளை அறுவடை செய்யவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது.

செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்

2021 தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. 2016 இல் ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. 2011 லும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. 2006 இல் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். கோவையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆளுமையான தலைவர்கள் வேண்டும் என்பதால் செந்தில் பாலாஜியை திமுக தலைமை களமிறக்கியுள்ளது. கடந்த உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது.

2024 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் செந்தில் பாலாஜி திரைமறைவில் அண்ணாமலையை தோற்கடிக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். சிறையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி திமுகவின் தேர்தல் களத்தை வழிநடத்துவதாக அண்ணாமலை கூட குற்றம் சாட்டியிருந்தார். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அண்ணாமலை தோல்வியை சந்தித்தார். இதனால், செந்தில்பாலாஜியே கோவையில் நேரடியாக களமிறங்கும் போது கணிசமான ஓட்டுகளில் வெற்றி பெறலாம் என்பதால் செந்தில் பாலாஜியை திமுக களமிறக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+