கங்கணம் கட்டி கோவையில் இறங்கிய ‘டீம்’.. ஜெயிலில் இருந்தபடியே அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்!
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலையை தோற்கடித்தே ஆகவேண்டும் என சிறையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி தனது கரூர் டீமுக்கு உத்தரவு போட்டுள்ளாராம். அவரது கட்டளையை ஏற்று அண்ணாமலையின் தோல்வியை உறுதி செய்வோம் என கங்கணம் கட்டி களத்தில் இறங்கியுள்ளனனர் செ.பா ஆதரவாளர்கள்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

அனைவரின் கண்களும் கோவை நோக்கி: தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தொகுதியில் அனைவராலும் உற்று நோக்கப்படும் தொகுதி கோவை. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
கோவை மக்களவை தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டு கடைசியாக வெற்றி பெற்றது 1996 ஆம் ஆண்டு தான். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நேரடியாக போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொகுதியை சிபிஐஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கி, திமுக கூட்டணி வெற்றியும் பெற்றது. இப்போது இந்த தொகுதியில் திமுக நேரடியாக களம் காண்கிறது. பாஜக, அதிமுகவும் நேரடியாக போட்டியிட உள்ளதால் நேரடி மும்முனை போட்டி நிலவுகிறது.
கடும் சவால்: கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் திமுகவுக்கு எப்போதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலுலும், கோவை லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜக வெற்றி பெற்றது. கோவை தெற்கில் வானதி சீனிவாசன் வென்றார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.
எஸ்பி வேலுமணி கோட்டை என கோவை மண்டலம் அதிமுகவினரால் வர்ணிக்கப்படுகிறது. அதனை கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபித்தார் வேலுமணி. இதையடுத்து, கோவையை திமுகவின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜியை திமுக களமிறக்கியது. அவரும் அதற்கான பணிகளை செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அபார வெற்றியை தேடித் தந்தார். அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வந்தது.
செந்தில் பாலாஜி சிறையில்: இந்நிலையில் தான், சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதால் அவர் சிறையில் இருந்தாலும் பிரச்சாரக் களத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் இந்த முறை அண்ணாமலையை தோற்கடிக்க செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.
திமுக கோவை வேட்பாளர் தேர்விலும் செந்தில் பாலாஜியின் கண்ணசைவே வென்றுள்ளதாக கூறப்படுகிறது. வேலுமணிக்கு நெருக்கமாக இருந்து பின்னர் அவருடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாட்டால் 2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தவர் கணபதி ராஜ்குமார். செந்தில் பாலாஜிக்கு நன்கு அறிமுகமானவரான கணபதி ராஜ்குமார், எஸ்பி வேலுமணியின் களப்பணி மற்றும் அரசியலை நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு திமுக சீட் கொடுத்துள்ளது.
திமுக தீவிரம்: செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் கோவை தொகுதி தேர்தல் பொறுப்பு தொழில் துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வெற்றிச் செய்தியை மட்டுமே கொண்டு வர வேண்டும் என்பது திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இட்டிருக்கும் உத்தரவு.
செந்தில் பாலாஜிக்கு பின்னர் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது கோவை தொகுதி தேர்தல் பொறுப்பு தொழில் துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா களமிறக்கப்பட்டுள்ளார். அதேசமயம், சிறையில் இருந்தபடியே, கோவை தொகுதியில் பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்: செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தம் என்பது தமிழக அரசியலை கவனிக்கும் அனைவரும் அறிந்ததே. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதற்கு முன்பிருந்தே அண்ணாமலைக்கும் அவருக்கும் அடிக்கடி வார்த்தை மோதல்கள் வெடிப்பது வழக்கம். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை தோற்கடித்ததில் செந்தில் பாலாஜியின் பங்கு அதிகம்.
அதன் காரணமாக செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை. செந்தில் பாலாஜி ஜாமீனில் வர முடியாமல் 9 மாதங்களாக சிறை வாசத்தை அனுபவிப்பதற்கும் அண்ணாமலையே காரணம் என கருதுகிறார்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள். இந்நிலையில், கரூரை விட்டு கோவைக்கு தாவி இருந்தாலும், அங்கு அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என சூளுரைத்து கிளம்பியுள்ளனர் கரூர் மாவட்ட செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.
அண்ணாமலையை தோற்கடிப்போம்: கோவையில் அண்ணாமலையை தோற்கடித்தே ஆகவேண்டும் என கரூரில் இருந்து தனது டீமை கோவையில் களமிறங்கச் சொல்லி சிறையில் இருந்தே உத்தரவு பறந்திருக்கிறதாம். செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்களான அந்த டீம் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலின் போது வார்டு வார்டாக திமுக வேட்பாளர்களுக்காக வேலை பார்த்தது. இந்நிலையில், அவர்கள் மீண்டும் கோவையில் முகாமிட்டுள்ளனராம்.
அதிமுகவின் தேர்தல் வியூகங்களும், பழைய அதிமுககாரர்களான அவர்களுக்கு அத்துப்படி என்பதால், எஸ்பி வேலுமணிக்கும், கரூர் டீம் குடைச்சல் கொடுக்கும் எனத் தெரிகிறது. கரூர் டீமுக்கு, லோக்கல் திமுகவினரும் உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என டிஆர்பி ராஜாவும் அறிவுறுத்தி உள்ளாராம். அண்ணாமலை தோல்வியை உறுதி செய்வோம் என செந்தில் பாலாஜியின் டீம் கோவையில் கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளது. என்ன நடக்கிறதென்று போகப்போக பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications