கோவையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய 20 சிலிண்டர்கள்.. 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்!
கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகரக் கொட்டகைகள் அமைத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமானப் பகுதியில் தகரங்களால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று அவர்கள் வழக்கமாக பணிக்குச் சென்றனர். இந்நிலையில் தான், அந்த குடியிருப்பில் சிலிண்டர் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

20 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர். இதனால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த கோவை வடக்கு, தெற்கு, கணபதி மற்றும் பீளமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சமைத்துக் கொண்டிருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலிண்டர்களில் இருந்து எரிவாயு வெளியேறி, அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
