இரவு நேரத்தில் கோவை பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு
கோவை: கோவை காரமடையில் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகேயுள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தவெகவின் காளம்பாளையம் ஊராட்சி செயலாளராக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணி்ப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார் பெண் நிர்வாகி. இந்த விவகாரம் தொடர்பாக காரமடை போலீசாரிடமும் அவர் இன்று புகார் அளித்தார்.
அந்தப் புகார் மனுவில், "கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவசரக் கூட்டம் என ஊராட்சி செயலாளர்கள் அனைவரையும் தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி அழைத்தார். நள்ளிரவில் முடிந்ததால், ஒன்றிய செயலாளர் கருப்புசாமி எனது பாதுகாப்புக்காக இருசக்கர வாகனத்தில் என்னை தொடர்ந்து வந்தார். அப்போது ஒரு பெண் வாகனத்தை வழிமறித்து லிஃப்ட் கேட்டார். அவரை மீட்டு காரமடை போலீசாரிடம் நாங்கள் ஒப்படைத்தோம்.
அப்போது அவரது வாகனத்தில் பெட்ரோல் இல்லை எனக் கூறி கருப்புசாமி எனது வாகனத்தில் பயணித்த போது, ஓரிடத்தில் நிறுத்தி என் கையை பிடித்து என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார். நான் சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டேன்.
அதைத் தொடர்ந்து என்னை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, வேறொரு பெண்ணை பதவியில் நியமித்ததோடு, என் நடத்தை சரியில்லை என அனைவரிடமும் அவதூறு பரப்பினார்.
அதன் பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில், கருப்புசாமி ஆதரவுடன் சபீதா என்பவர் என்னை சாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாள் சபீதா, அவரது கணவர் பாண்டியுடன் வந்து எனக்கு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மேற்கண்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக மேட்டுப்பாளையம் உட்கோட்ட டிஎஸ்பி பாஸ்கர் விசாரித்தார். அதைத் தொடர்ந்து காரமடை போலீசார் பொது இடத்தில் ஆபாச செயல்கள், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் தவெக ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, சபீதா, அவரது கணவர் பாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தவெக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு அநாகரீக குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக எம்.எல்.ஏவைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஆளுங்கட்சியான தவெகவுக்குள்ளேயே, மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளே பாலியல் புகார் தெரிவித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யா என்ற சத்தியராஜ் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்று அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
