SIR.. 5 வினாடிகளில், 2002, 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரம்.. கோவை கலெக்டரின் சூப்பர் திட்டம்
கோவை: வாக்காளர் பட்டியலில் 2002/2005 -ம் ஆண்டில் தங்களது அல்லது தங்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர் இடம் பெற்ற விவரங்களை எளிதில் கண்டறியும் வகையில் கோவை மாவட்ட கலெக்டரின் முயற்சியில் ஒரு புதிய மென்பொருள் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப கியூஆர் கோடு மூலம் வாக்காளர் பட்டியலில் முன்பு ஓட்டு போட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்தார்கள். இந்தப் பணிகளுக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 445 பேர் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான வீடுகளுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது கணக்கீட்டு படிவங்களில் உள்ள விவரங்களை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்ய உதவி செய்து வருகிறார்கள். அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. கடந்த 2002 அல்லது 2005ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் விவரங்களை அவர்கள் பெயர் இருக்க வேண்டும். அந்த விவரங்களை குறிப்பிட்டால் போதும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வசதிகளை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் புதியமுயற்சிகளில் இறங்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, வக்காளர் பட்டியலில் 2002/2005 -ம் ஆண்டில் தங்களது அல்லது தங்கள் தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர் இடம் பெற்ற விவரங்களை எளிதில் கண்டறியும் வகையில் கோவை மாவட்ட கலெக்டரின் முயற்சியில் ஒரு புதிய மென்பொருள் செயலி வடிவமைக்கப்பட்டிருககிறது.
இதில் 'கியூஆர் கோடு' மூலமாக உள்ளே சென்று, தங்களது பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போது தமிழில் மொழிபெயர்ப்பான பிறகு என்டர் செய்தால், 5 வினாடிகளில், 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், அதே தொகுதியில் தங்களது பெயர் போன்று ஒரே மாதிரியான பெயர் கொண்ட அனைத்து வாக்காளர் விவரங்களையும் அறிந்துவிட முடியும்.
அதன்பிறகு தந்தை, தாய், தாத்தா, பாட்டி பெயரை பார்த்து தங்களின் பெயரை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். மேலும், தற்போதைய வாக்காளர் அடையாள அட்டையை உள்ளீடு செய்தும் தரவுகளை தேடிப் பெற்றிட முடியும். இந்த செயலி மூலமாக தேடும் நேரம் மிகவும் குறைவு. எனவே, இந்த செயலியை பயன்படுத்தி படிவங்களை பூர்த்தி செய்திட முடியும்.. அத்துடன் தேர்தல் பிரிவு ஊழியரிடம் (பி.எல்.ஓ.) கொடுத்த படிவத்தை ஊழியர் தனது செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து விட்டாரா என்பதை voters.eci.gov.in/login என்ற இணையதளத்துக்கு சென்று பார்த்து வாக்காளர்கள் உறுதி செய்ய முடியும்.
voters.eci.gov.in/login என்ற இணையதளத்தை பொறுத்தவரை முதலில் நிரப்பும் படிவம் என்ற 'மெனு'-வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு மாநிலத்தை தேர்வு செய்து விட்டு வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட வேண்டும். அதில், உங்களின் படிவத்தை தேர்தல் பிரிவு அலுவலர் பதிவேற்றம் செய்து இருந்தால், தங்களது படிவம் உள்ளீடு செய்யப்பட்டு விட்டது என்ற எஸ்எம்எஸ் வரும். இதன் மூலம் தங்களின் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications