எடப்பாடியுடன் தொடரும் மோதல்.. டெல்லியிடம் 2 வாய்ப்பை முன் வைத்த எஸ்பி வேலுமணி.. என்ன நடக்கிறது?
கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் எஸ்பி வேலுமணி, டெல்லியின் சிக்னலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்து வருவது தெரிய வந்துள்ளது. முதலில் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து மாற்ற டெல்லியின் கேட்டை தட்டிய எஸ்பி வேலுமணி தரப்பு, அடுத்ததாக தவெகவில் இணையவும் அனுமதி கேட்டிருக்கிறது. ஆனால் டெல்லியில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகளே கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தது மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

இதன்பின் எஸ்பி வேலுமணி உட்பட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் யாருக்கும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பறித்த பதவியை கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், தாங்கள் யாரும் புதிய பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்று கூறி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் தனது ஆதரவாளர்களை தயார் செய்து வருகிறார்.
மறுபக்கம் அதிமுகவில் இருந்து விலகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் பாஜகவின் உதவியை எஸ்பி வேலுமணி தரப்பு நாடி இருக்கிறது. முதலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாக கேட்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழக அரசியலில் அமித்ஷா கவனம் செலுத்த விரும்பவில்லை. உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் காத்திருந்த எஸ்பி வேலுமணி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாமா என்று ஆதரவாளர்களிடம் ஆலோசித்துவிட்டு, டெல்லியிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அப்போது டெல்லி எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
இதனால் எஸ்பி வேலுமணி தரப்பில் அப்செட்டில் இருக்கிறதாம்.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனது பிடியை வலுவாக்கி கொண்டே இருக்கிறார். எஸ்பி வேலுமணியோ கோவையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதில்லை. இதனால் நாளுக்கு நாள் அதிமுக மற்றும் எஸ்பி வேலுமணி இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது. விரைவில் இறுதி முடிவை எடுப்பார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications
