ஒரு ரூபாய் இட்லி பாட்டியை நியாபகம் இருக்கா?.. எஸ்.பி.வேலுமணி செய்த தரமான சம்பவம்.. கோவை மக்கள் பாராட்டு
கோவை: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வந்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உதவியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் 90 வயதான கமலாத்தாள் பாட்டி எனும் ஒரு ரூபாய் இட்லி பாட்டி. இவர் ஒற்றை ஆளாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். 25 பைசாவில் இட்லி விற்கத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வால் தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு செட் இட்லி குறைந்தபட்சம் 20 முதல் 30 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 50 ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஏழை மக்களுடைய பசியைப் போக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, சாம்பார், சட்னி செய்து விற்பனை செய்து வருகிறார். இட்லி சாப்பிட வருபவர்களிடம் ஒருநாளும் அவர்கள் சாப்பிட்டதை இவர் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. சாப்பிட்டவர்கள் கணக்கு வைத்துக் கொடுப்பதைத்தான் வாங்கிக் கொள்வார். ஒரு சிலர் ஒரு ரூபாயும், ஒரு சிலர் தாங்களாகவே விலையை உயர்த்தி கொடுத்துச் செல்வதும் வழக்கம்.
இதுகுறித்து, மகேந்திரா குழுத் தலைவர் ஆனந்த் மகேந்திரா கமலாத்தாள் பாட்டியைப் பாராட்டி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தது மட்டுமல்லாமல், அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக கேஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவு கமலாத்தாள் பாட்டியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.
இதைத்தொடர்ந்து, கோவை பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாள் பாட்டிக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கியது. பின்னர், கமலாத்தாள் பாட்டியின் சேவையை விரிவுபடுத்த விரும்பிய ஆனந்த் மகேந்திரா, மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் மூலமாக சொந்தமாக கமலாத்தாளுக்கு நிலம் வாங்கிப் பதிவு செய்யவும் உதவியது. அதுமட்டுமல்லாமல், அவருக்கு வீடு, இட்லி கடை நடத்துவதற்கான கட்டடத்தையும் கட்டிக் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, கமலாத்தாள் பாட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கெளரவித்துப் பாராட்டினார். மேலும், ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சின் நூலின் முதல் பிரதியை முதல்வர் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு ரூபாய் இட்லி பாட்டி எனும் கமலாத்தாள் பாட்டியின் சேவையைப் பாராட்டி தனது சொந்த செலவில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி 2 சென்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
கோவை, தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் நிலையில், அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு சென்ட் இடம் வாங்கி அவரது பெயருக்குப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த இடத்தின் பத்திரத்தை பாட்டி கமலாத்தாவிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி இன்று ஒப்படைத்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இந்தச் செயலை கோவை மாவட்ட பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications