இதயத்தில் பைபாஸ் சர்ஜரி! நல்லா ரெஸ்ட் எடுங்க! நேரில் நலம் விசாரித்த முதல்வர்! உருகிய திமுக நிர்வாகி!
கோவையில் திமுக நிர்வாகியை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.
கோவை: நேற்று கோவைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மேலும், சில காலம் ஓய்வெடுத்து கொள்ளுமாறும், உடல்நலம் தான் முக்கியம் எனவும் அவருக்கு அறிவுரை கூறியதோடு தைரியமும் அளித்திருக்கிறார்.
கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக் அண்மையில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம், அந்தந்த ஊர்களில் உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக முன்னோடிகளை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், கோவை மாநகர திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிங்காநல்லூர் கார்த்திக்கை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சிங்காநல்லூர் கார்த்திக்
சிங்காநல்லூர் கார்த்திகை பொறுத்தவரை கோவை மாநகராட்சியின் துணை மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். பள்ளிப்பருவம் முதலே திமுகவில் இயங்கி வருபவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட டாக்டர் மகேந்திரனால் தனது வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தவர். சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி தற்போது கவுன்சிலராக உள்ளார். இவரை மேயராக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது.

இளம் வயது
இளம் வயதிலேயே இதயத்தில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட கார்த்திக், அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் அரசியல் நிகழ்வுகளில் இருந்து முழுமையாக ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார். இதுவே அவருக்கு மனதளவில் பெரிய பாரமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓய்வெடுக்குமாறும் உடல்நலம் சீராகிய பிறகு கட்சிப்பணிகளில் ஈடுபடுமாறும் முதல்வர் அறிவுறுத்தியது அவருக்கு ஆறுதலை அளித்திருக்கிறது.

உருகிய நிர்வாகி
அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வீட்டுக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்ற நிலையில், இப்போது முதல்வரும் நேரில் வந்து நலம் விசாரித்திருப்பதால் மனிதர் அப்படியே உருகிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications