தாம்பரத்தை விட்ருங்க.. மேட்டுப்பாளையத்தை பாருங்க.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. மொத்தமா ஜொலிக்க போகுது
கோவை: மேட்டுப்பாளையத்துக்கு மட்டுமல்லாமல் கொங்கு மண்டல மக்களுக்கே மகிழ்ச்சி செய்தியினை ரயில்வே நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது. என்ன அது?
ரயில் பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், சமீபத்தில், தாம்பரம் ரயில் நிலையம் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

பிளாட்பார்ம்கள்: 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைய இருப்பதாக கடந்த 2018-ல் தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், புதிதாக 6 பிளாட்பார்ம்கள் கொண்ட டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், அதிலேயே பார்க்கிங் வசதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவை கட்டப்பட இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, தேவைப்படும் இடங்களில் "எஸ்கலேட்டர்" அமைக்கப்படுவதாகவும், இதற்கான வேலைகளும் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மேட்டுப்பாளையத்திலும் எஸ்கலேட்டர் வசதி கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேட்டுப்பாளையம்: வரலாற்று முக்கியத்துவமும், பழமையும் வாய்ந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கடந்த 1873 ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கப்பட்டது.. நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துபோவதால், இங்குள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில்தான் மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. சேலம் ரயில்வே கோட்டத்தில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட உள்ள 15 ரயில் நிலையங்களில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையமும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது... இதன் மூலம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் சொன்னதாவது:
முன்பதிவு: "பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.. பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் என இரண்டையுமே இங்கு பெற்றுக்கொள்ளலாம். அதேபோல, அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.14.80 கோடியில் இந்த ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தவும், புனரமைக்கவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.. அந்தவகையில், பாதைகள் அகலப்படுத்தப்பட உள்ளன.
வாகனங்கள் உள்ளே வரவும், வெளியேறவும் வழிகள் உருவாக்கப்பட உள்ளன.. பயணிகள் நடந்துசெல்லவும் தனியாக நடை பாதைகள் ஏற்படுத்தப்படும். 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பிரதான நுழைவு வாயிலின் முகப்பு தோற்றம் மேம்படுத்தப்படும்.
சிசிடிவி கேமராக்கள்: அறிவிப்பு பலகைகள் பொருத்த போகிறோம். இது பயணிகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். பழைய மேற்கூரைகள் பழுதுபார்க்கப்படுவதுடன், கூடுதலாக நடைமேடை நிழற்கூரைகளும் ஏற்படுத்தப்படும்.. பயணிகளுக்கு வசதியாக, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்தப்படும். ரயில்நிலைய வளாகத்தில் பாதுகாப்புக்காக, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
நடைமேடைகள், கழிப்பறைகள், முன்பதிவு மையங்களை மாற்றுத்திறனாளி பயணிகள் அணுக வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளங்கள் ஏற்படுத்தப்படும். குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலும், அதிக ஒளியை அளிக்கவும் ரயில் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சி: இதையடுத்து, மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் ஜொலிக்க போவது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications