உடலை வாங்க மாட்டோம்! சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யனும்.. கோவை மாணவரின் பெற்றோர் திட்டவட்டம்
கோவை: சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவை மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர். கோவையில் பட்டியலின மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், அவரது பெற்றோரிடம் பீளமேடு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவரின் பெற்றோர் ஆசியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கோவை பீளமேட்டில் உள்ள கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலனை, சக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவர் அகிலன் வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் உயிரிழந்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் (43), அகிலன் படித்த 11 ஆம் வகுப்பின் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் 2 மாணவர்கள் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
அகிலன் போன்று இன்னொரு மாணவனுக்கு ஏற்படக்கூடாது என்றும், ஆசிரியர்களை கைது செய்யக் கோரியும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அகிலனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
அகிலனின் தந்தை கூறியதாவது:- "ஒரு அகில் போயிட்டான்.. இனிமேல் ஒரு அகிலன் போயிடக் கூடாது என்பது தான்.. எனக்கு வேற எதுவும் வேண்டாம். என் மகன் போயிட்டான். இனி ஒருவருக்கு இதே மாதிரி நடக்க கூடாது. எவ்வளவு இது பண்ணாலும் நாங்க என் பிள்ளையோட உடலை வாங்க மாட்டோம். எனக்கு எல்லாம் போய்விட்டது. ஆசிரியர்களை கைது செய்தால் தான் நான் என் மகன் உடலை வாங்க மாட்டேன். விசாரணை முடிந்தால் தான் கைது செய்வோம் என சொல்றாங்க..
இரண்டு நாட்களாக போராடுகிறேன். எனக்கு வேற எதுவும் எனக்கு தேவையில்லை. யாரையுமே கைது செய்யவில்லை. விசாரணையில் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சாதியக் கொடுமையால் இன்னொரு மாணவன் சாகக் கூடாது. அது ஒன்று தான் எனக்கு வேண்டும்.. விசாரணை அதிகாரியை மாற்றினாலும் நன்றாக இருக்கும் என நான் சொல்லிக் கொள்கிறேன். என் பையன் உடலை வாங்க மாட்டேன்.." என்று கூறினார்.
முன்னதாக மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
