கோவை வந்த தெலங்கானா தொழிலதிபரிடம் ஒரு கோடி கொள்ளை.. கள்ளக்குறிச்சி வரை சேஸிங்.. மாஸ் காட்டிய போலீஸ்
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆட்சி மாறியும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கோவை வந்த தெலங்கானா தொழிலதிபரிடம் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கள்ளக்குறிச்சி அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தாமன் ரங்கசாமி (66) தங்கநகை வாங்குவதற்காக கோவை வந்துள்ளார். கையில் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் பேருந்தில் வந்துள்ளார். அவர் அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சில நொகைளில் மர்மநபர்கள் சிலர் கையில் வைத்திருந்த பணப்பையை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தாமன் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு திருடர்கள் கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பார் ஷஹனாஸ் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கவாடி வழியாக செல்லும் கார்களை ஒன்றன் பின் ஒன்றாக சோதனை செய்தனர். அதில் கொள்ளையர்கள் பணத்துடன் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
மீதமுள்ள 3 பேர் இப்போது கைது செய்யப்பட்டனர். தெலங்கானா தொழிலதிபரான தாமன் ஹைதராபாத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரின் நடவடிக்கைகளை கண்காணித்து தான் கொள்ளையடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
