கோவை மேயர் யார்? போட்டியில் முந்திநிற்கும் 3 திமுக கவுன்சிலர்கள்! சூடுபிடிக்கும் மறைமுகத் தேர்தல்!
கோவை: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 3 திமுக கவுன்சிலர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர்.
நிவேதா சேனாதிபதி, இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு ஆகிய மூவரில் ஒருவரே திமுக சார்பில் கோவை மேயராக வரக்கூடும் எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற திமுகவை சேர்ந்த இன்னும் பல பெண் கவுன்சிலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போதே ஒவ்வொரு மாநகராட்சியிலும் யார் மேயராக வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மீனா லோகு
அந்த வகையில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சியாக திகழும் கோவை மாநகராட்சியில் யார் மேயராக வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி 46-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மீனா லோகு ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர், ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். இதனால் இவரது பெயர் மேயர் பதவிக்கான பரிசீலனையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

கார்த்திக் மனைவி
இதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் பிரதான இடத்தில் இருக்கிறார். கார்த்திக் ஏற்கனவே கோவை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகேந்திரனால் தனது வெற்றிவாய்ப்பை சிங்காநல்லூரில் இழந்த கார்த்திக், அமைச்சராகும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இந்நிலையில் இந்த முறை தனது மனைவி இளஞ்செல்வியை கோவை மேயராக்குவது என்ற தீர்மானத்தோடு காய் நகர்த்தி வருகிறார். கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கோவை மாநகராட்சி 52-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

நிவேதா சேனாதிபதி
இதனிடையே 22 வயதே ஆன இளம் பெண் கவுன்சிலர் ஒருவரும் கோவை மேயர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97-வது வார்டில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனி பறித்திருக்கிறார். இதனால் இவரும் மேயர் ரேஸில் முந்துகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் சிபாரிசு மூலம் தனது மகளை மேயராக்க மருதமலை சேனாதிபதி லாபி செய்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications