கோவையின் அடையாளத்தையே மாற்ற போகுதா.. புதிய டிஎன் டெக் சிட்டி.. கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்
கோவை: கோயம்புத்தூரில் டிஎன் டெக் சிட்டிக்காக அடையாளம் காணப்பட்ட நிலம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடர்ந்த காடுகளை ஒட்டியுள்ள யானை வழித்தடத்தில் தான் அந்த டெக் சிட்டியை உருவாக்க வேண்டுமா என்று கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னையில். தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழக அரசு தொடங்கவுள்ளதாக கூறினார். மேலும் இந்த தொழில்நுட்பநகரங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும் புதிதாகத் தொழில் தொடங்கும் முனைவோர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய மையங்களாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, கோவையில் டெக் சிட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் அண்மையில் இடத்தை அடையாளம் கண்டது. கோவை மருதமலை பாரதியார் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் 321.74 ஏக்கர் பரப்பளவில் டிஎன் டெக் சிட்டியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 321 ஏக்கர் பரப்பளவில் PPP முறையில் TN டெக் சிட்டிக்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஏலங்களை எல்காட் வெளியிட்டுள்ளது. இந்த டெக் சிட்டியில் வீடுகள், வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், கிரேடு A அலுவலக இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு பகுதிகள், ஹோட்டல்கள், மல்டிபிளக்ஸ் திரைகள், சுற்றுச்சூழல் பூங்காக்கள் போன்றவை அமைய உள்ளது. இந்நிலையில் யானைகள் வழித்தடத்தில் இந்த மாதிரி திட்டங்களை கொண்டு வருவீர்களா? கோவையின் கிழக்கு அல்லது தெற்கு பகுதியில் இந்த திட்டங்களை செயல்படுத்தலாமே என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
Tamil Nadu Geography என்ற பெயரில் சமூக வலைதளத்தில் இயங்கி வரும் இயற்கை ஆர்வலர் வெளியிட்டுள்ள பதிவில், ஏன் சார் ஏன்? நீங்கள் ஏன் லட்சக்கணக்கான மக்களை இந்த பக்கம் கொண்டுவர விரும்புறீங்க.. நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். இந்த யோசனைகளை யார் உங்களுக்கு கொடுக்கிறார்கள்? இந்த பகுதியில் யானைகள் மற்றும் மனித மரணம் பற்றி நானே பல முறை எழுதினேன். சில நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் என பலர் ஏற்கனவே சில பகுதிகளை ஆக்கிரமித்து யானைகள் தடுப்பு வேலியில் இருக்கிறார்கள். மலையடிவாரத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நகரத்தை உருவாக்க போவதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பல யானைகள் கடந்த ஆண்டு வந்து சென்றனர். இந்த திட்டம் கோயம்புத்தூரை வளர்க்காது, கோவையின் தனித்துவத்தையே அழித்துவிடும.

யானைக் காடுகளுக்கு அருகில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடத்தும் திட்டங்களைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஒரு பக்கம் காடு, மறுபுறம் தொழில் என கூறப்படும் நகரம் கோவை. அதன் மேற்கு புறநகர் காடுகளைத் தொடாமலேயே இத்தகைய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்க முடியும். எனவே இந்த திட்டம் ஒரு போதும் நடக்காது " என்றார்.
கோவையில் டெக் சிட்டியை நிறுவுவதற்கான விரிவான மாஸ்டர் பிளான் மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளை தயாரிப்பதற்கான டெண்டரில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் (மண்டல வளாகம்) வன எல்லைக்கும், அரசு நடத்தும் இரண்டு வளாகங்களுக்கும் இடையில், பயன்படுத்தப்படாத நிலத்தின் ஒரு பகுதி என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் போலுவம்பட்டி பள்ளத்தாக்கு இடையே மருதமலை அடிவாரம் வழியாக காட்டு யானைகள் வழக்கமான நடமாட்டத்திற்கு மலையை ஒட்டிய கிராமப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை பயன்படுத்துகின்றன. வனப்பகுதி செங்குத்தானதாக இருப்பதால் யானைகள் முதன்மையாக இந்த பகுதியில் உள்ள சமவெளி நிலத்தையே கடந்து செல்ல பயன்படுத்துகின்றன. ஏற்கனவே இங்குள்ள இரண்டு பல்கலைக்கழக வளாகங்களுக்குள் யானைகள் நுழைந்து வருவதாகவும். இப்பகுதியில் சிறுத்தைப்புலிகளும் அடிக்கடி காணப்படுவதாகவும் வனத்துறையினர் கூறுகிறார்கள்.
இதனிடையே சோமையம்பாளையம் கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட நிலம், கோயம்புத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்டது என்றும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறும் இடம் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். மருதமலை அடிவாரத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பக்தர்கள் நடமாட்டம், இரண்டு பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரி ஆகியவை தற்போது வனவிலங்குகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கேரள எல்லையான வாளையாற்றில் தொடங்கி நீலகிரி மலையடிவாரம் வரை வன எல்லையில் இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளதாகவும், இப்படியான சூழலில் டெக் சிட்டியை அங்கு போய் அமைப்பது பெரிய அளவில் வனவிலங்கு மோதல் அதிகரிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதே நேரம் மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (HACA) கீழ் வரும் கிராமங்களில் சோமயம்பாளையம் ஒன்று என்றும் இந்த பகுதிக்கு பதில், கோவை திருப்பூர் இடையே இந்த டெக் சிட்டியை கொண்டு வரலாம் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications