எடப்பாடி பழனிசாமி குறித்து ஒருமையில் விமர்சனம்.. வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா
சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகி இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆதவ் அர்ஜூனா, அந்த வார்த்தைகள் என் இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகனாக இருப்பர் ஆதவ் அர்ஜூனா. அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராக இருந்த இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சையை தொடர்ந்து அவர் விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு அவரே கட்சியில் இருந்து வெளியேறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் தேர்தல் பிரிவு நிர்வாகத்தை ஆதவ் கண்காணித்து வருகிறார். திமுகவை கடுமையாக விமர்சித்து லைம்லைட்டில் இருந்து வந்த ஆதவ் அண்மையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், ஆதவ் அர்ஜூனா நடந்தபடியே பேசும் ஒரு வீடியோ வெளியானது. அதில் அவர், அண்ணாமலை தன்னுடன் 10 பேரை வைத்துக் கொண்டு 20 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்தது சர்ச்சையானது.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுதான் ஆதவ் அர்ஜூனாவின் உண்மை முகம் என்று அரசியல் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் அவர் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள். இன்னும் சிலர், இதே நிலை தொடர்ந்தால் அவர் தவெகவை முடித்துவிடுவார். எனவே கவனமாக இருங்கள் என விஜயை எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா தன் எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம். எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது.
என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.
தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு நன்றி." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications