கோவையில் விஜய் ரோடு ஷோ.. திறந்தவெளி வேனில் தவெக தொண்டர்களுடன் கைகுலுக்கி உற்சாகம்!
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கிறார். கோவையில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் விஜய். கோவை விமான நிலையத்தில் ஏராளமான தவெகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
தவெக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த கருத்தரங்கு மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு
அதன்படி, இன்று (ஏப்ரல் 26) ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தி, சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இரண்டாம் நாளான நாளை (ஏப்ரல் 27), கரூர் மேற்கு, கரூர் கிழக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மேற்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் மாநகர், நீலகிரி கிழக்கு, நீலகிரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவை வந்த விஜய்
இந்தக் கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் குறித்தும் அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் நடைபெறும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் பங்கேற்க சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை காரில் புறப்பட்டார் விஜய். விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தடைந்தார் விஜய். கோவையில் விஜய்யை வரவேற்க தவெக கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தர். கோவை விமான நிலையத்தில் ஏராளமான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
விஜய் ரோடு ஷோ
தவெக தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் திறந்த வேனில் ஏறி நின்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் விஜய். தொண்டர்கள் அளித்த கட்சிக்கொடியை தனது கழுத்தில் அணிந்து கொண்டு, அவர்களை நோக்கி கையசைத்தார் விஜய்.
திறந்தவெளி வேனில் நின்றபடியே, தான் தங்க உள்ள ஹோட்டலுக்கு கிளம்பினார் விஜய். வழிநெடுக நின்ற தவெக தொண்டர்களுடன் கைலுக்கியபடியே இருந்தார் விஜய்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்த விஜய், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களையும் முதல் முறையாக குறிப்பிட்டு உங்களின் பெயர்களை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications