கோவை டிரெண்ட் மாறுது?.. தவெக 6 தொகுதிகளில் ஆதிக்கம்.. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுகவின் பாரம்பரிய கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில், இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கணிசமான முன்னிலை பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், சூலூர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம் ஆகிய முக்கிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்றனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் தவெக வேட்பாளர் விக்னேஷ் ஆரம்ப சுற்றிலிருந்தே முன்னிலை பெற்று, வாக்கு வித்தியாசத்தையும் உயர்த்தி வருகிறார். பல சுற்றுகள் முடிவில் அவர் முன்னிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்த தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ், மூன்றாவது சுற்றிலிருந்து நிலைமையை மாற்றி முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னிலையில் பெற்று வெற்றி பெற்றார்.
சிங்காநல்லூர் மற்றும் சூலூர் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வலுவான முன்னிலை பெற்று, அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றனர். குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகரப் பகுதிகளில் தவெகவுக்கு கிடைக்கும் ஆதரவு இந்த முறை அதிகரித்துள்ளது என்பது இந்த எண்ணிக்கைகள் மூலம் வெளிப்படுகிறது.
மொத்தத்தில், கோவையில் தவெக பெற்றுள்ள இந்த முன்னிலை, மேற்கு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிமுக வலுவாக இருந்த வாக்கு வங்கி இந்த முறை சிதறி, புதிய அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்து வருவதை இந்த நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.
கோவையில் பாதிக்கும் மேல் தொகுதியில் தவெக முன்னிலை பெற்றுள்ளதால், கட்சியினர் தெருக்களில் கூடிவந்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பட்டாசு வெடித்து, கோஷங்கள் எழுப்பி, ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி கொண்டாடும் காட்சிகள் பல இடங்களில் காணப்பட்டன.
இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டதால், சில பகுதிகளில் திருவிழா சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications