விஜய்யால் என் குழந்தைகள் ஒரே அடம்.. காவல்நிலையத்திற்கே சென்று புகாரளித்த கோவை விசிக நிர்வாகி
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்று வாக்கு சதவீதத்துடன் முடிந்துள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் குழந்தைகள் மூலம் செல்வாக்கு செலுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகி அவர் மீது விசிக நிர்வாகி கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், "கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிகட்ட பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் பேசினார். அந்தக் கூட்டத்தில் விஜய் பேசும்போது, 'குழந்தைகள் தங்களுக்குத் தேவையான சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம் பிடிப்பார்கள்.

விஜய்யின் பேச்சு
பெற்றோரிடம் அடம் பிடித்து தவெகவுக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்' என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய தூண்டுதல், அரசியல் முதிர்ச்சியற்ற பிஞ்சு குழந்தைகளின் மனநிலையைத் தேர்தல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகும். ஒரு தந்தையாக எனது சொந்தக் குடும்பத்திலேயே இதன் கசப்பான விளைவை நான் எதிர்கொண்டுள்ளேன்.
விஜய்யின் இந்தப் பேச்சினால் தூண்டப்பட்ட எனது குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லி என்னிடம் தேவையற்ற முறையில் வற்புறுத்துகின்றனர். நான் மறுக்கும்போது அவர்கள் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகி, அழுகையிலும், உணவைத் தவிர்ப்பது போன்ற பிடிவாதங்களிலும் ஈடுபடுகின்றனர். இது ஒரு தந்தையாக எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
குழந்தை எதிர்காலம்
எனது குழந்தைகளின் எதிர்கால மனநலன் மற்றும் ஒழுக்கத்தின் மீது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 123(2): வாக்காளர்களின் முடிவில் குறுக்கிடும் வகையில் குழந்தைகளைப் பயன்படுத்தி உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை உருவாக்குவது என்பது ஊழல் நடைமுறையாகும். மேலும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 171 கீழ், தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மீது இப்படி செல்வாக்கு செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 95 & 353: குழந்தைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வாக்காளர்களைத் தூண்டுதல் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. குழந்தைகளை பாதிக்கும் வகையிலும், அவர்களைச் சுரண்டும் வகையிலும் மின்னணுப் பதிவுகளை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
விஜய் மீது நடவடிக்கை
குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டப்படி, குழந்தைகளைத் தேர்தல் முகவர்களாகவோ அல்லது பிரச்சாரக் கருவிகளாகவோ பயன்படுத்துவது இச்சட்டத்தின்படி கடும் குற்றமாகும். இந்தப் பேச்சு சென்னையில் நடைபெற்றிருந்தாலும், இதன் விளைவாக உருவாகும் வீடியோக்கள் மற்றும் அதனால் எனது குழந்தைகள் உட்படக் கோயம்புத்தூர் மாநகரக் குழந்தைகள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் இங்கேயே உணரப்படுகின்றன.
அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாநகரக் காவல்துறையிடம் இந்தப் புகாரைப் பதிவு செய்கிறேன். தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என்று குழந்தைகள் அழுவது அவர்களின் உளவியல் ரீதியான வன்முறைக்கு (Psychological Abuse) சான்றாக உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநலனைச் சிதைக்கும் வகையில் பேசிய விஜய் மீதும், அவரது கட்சியின் மீதும், இத்தகைய வீடியோக்களைப் பரப்பும் நபர்கள் மீதும் சைபர் கிரைம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications