"பயம் என்பது திமுக அகராதியிலேயே கிடையாது".. அமலாக்கத் துறை சோதனை குறித்து வைகோ தடாலடி
கோவை: பயம் என்பது தி.மு.க வின் அகராதியிலேயே கிடையாது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை.

மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகள் பதுங்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என்றார்
நீட் தேர்வு விலக்கு குறித்து தி.மு.க.வின் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, நீட் வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்குமா? என்ற கேள்விக்கு, எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வி.பி.சிங், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அமைச்சர் பதவி வழங்க முன் வந்த போதும் நான் அதை ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் எனக்கு விருப்பமில்லை என்றார்.
வருமான வரித்துறை சோதனைகளுக்கு தி.மு.க அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு, பயம் என்பது தி.மு.க வின் அகராதியில் இல்லை. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. தி.மு.க வினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications