ஸ்டார்ட் மியூஸிக்.. திமுக மகளிரணி கூட்டத்திற்கு சவால்.. கோவையில் வள்ளி கும்மி ஆடிய நயினார் அண்ணாமலை
கோவை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்ற அதே நாளில், பாஜக பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் வள்ளி கும்மி நடனம் ஆடினார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் இப்போதே அனல்பறக்க தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுகவும் முயற்சி செய்த வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பு அரசியலில் தீவிரப்படுத்தியுள்ளார். திருப்பூரில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றுள்ளது. அதே நாளில் பாஜகவின் மொத்த நிர்வாகிகளும் கோவையில் முகாமிட்டனர்.

பாஜக வள்ளி கும்மி நடனம்
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். தற்போது அவர் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் அதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. மகளிரணி மாநாட்டிற்காக கொங்கு மண்டலத்தில் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்.
அதனால் பாஜக பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டனர். இதற்காக ஏற்பாடுகளும் பெரியளவுக்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நிகழ்வான வள்ளி கும்மி நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு
இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடனமாடினார்கள். அப்போது பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அரவிந்த் மேனன், ஏபி முருகானந்தம் உள்ளிட்டோர் மேடையிலேயே வள்ளி கும்மி நடனம் ஆடினார்கள். அப்போது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications