அப்பா இல்லை.. 1 வருடமாக பள்ளிக்கே போகாத 2 குழந்தைகள்.. வால்பாறையில் சிங்கப்பெண் படை நெகிழ்ச்சி செயல்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அசத்தலான ஒரு காரியத்தை தவெக அரசின் சிங்கப்பெண் சிறப்பு படையினர் செய்துள்ளார்கள்.. அண்மையில் பழங்குடி கிராமத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த செய்திதான் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு போலீஸ் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற சூப்பர் திட்டத்தை துவக்கியிருக்கிறது.. இந்த படை துவங்கியதில் இருந்தே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மின்னல் வேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பெண் டீம் சாதனை
கடந்த ஜூலை 3 முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டுமே, மாநிலம் முழுவதும் 371 புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, 25 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. அதுபோலவே காணாமல் போன 7 பெண்கள், 6 குழந்தைகளை பத்திரமாக மீட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தவிர், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் என மாநிலம் முழுவதும் 3,882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி, சமூகத்தின் அனைத்து தரப்பினரிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கத் துரிதமாகவும், அர்ப்பணிப்புடனும் களப்பணியாற்றி கொண்டிருப்பதை மறுக்க முடியாது
கோவை மாவட்டம் சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் அசத்தலான ஒரு காரியத்தை சிங்கப்பெண் சிறப்பு படையினர் செய்துள்ளார்கள்.. வால்பாறையின் அடர்ந்த மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள கீழ் பூனாச்சி என்ற பழங்குடியின மலைவாழ் கிராமம்.. இந்த மலைவாழ் கிராமத்திலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வால்பாறை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த பெண் போலீசார் சென்றிருக்கிறார்கள்.
உதவி ஆய்வாளர் ரோஜினா பானு தலைமையில், தலைமை காவலர் கீதா மற்றும் காவலர் இந்துமதி ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், பூனாச்சி கிராமத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று மக்களுடன் பேசினார்கள்.. அவர்களுடன் கலந்துரையாடும்போதுதான், ஒரு உண்மை தெரியவந்துள்ளது.
வால்பாறை பழங்குடி மக்கள்
அந்த பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணின் 2 பிள்ளைகள், கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த பிள்ளைகளின் அப்பா இறந்துவிட்டாராம்.. அதற்கு பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக, மஞ்ளுதாய் மஞ்சுளாவால் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல் போயுள்ளது.. 5ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய சிறுவனும், 8ம் வகுப்போடு கல்வியைப் பாதியில் கைவிட்ட சிறுமியும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, இந்த 2 பிள்ளைகளும் வீட்டிலேயே முடங்கியிருப்பது தெரியவந்தது.
மஞ்சளா தந்த சம்மதம்
உடனே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், மஞ்சுளாவிடம் பேசினார்கள்.. எக்காரணம் கொண்டும் குழந்தைகளின் படிப்பை மட்டும் நிறுத்த வேண்டாம், கல்விதான் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஆயுதம் என்று எடுத்துரைத்தனர்கள்.. பிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி, மஞ்சளாவின் சம்மதத்தை பெற்றனர்.
இறுதியாக வால்பாறையில் இயங்கி வரும் அரசு உண்டு மற்றும் உறைவிடப் பள்ளியில் அந்த 2 பிள்ளைகளை சிங்கப்பெண் சிறப்பு படையினரே சேர்த்து விட்டனர். அத்துடன் மட்டுமல்லாமல், சிறுவர்களின் படிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், யூனிபார்ம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தங்கள் சொந்த பொறுப்பில் வழங்கினர்.
தாயுள்ளம் - நெகிழ்ச்சி
"இந்த குழந்கைளின் படிப்பு முடியும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு உறுதுணையாக இருப்போம்" என்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நெகிழ்ச்சியுடன் உறுதியளித்தனர்.
அடர்ந்த காட்டுக்குள் வறுமை காரணமாக 2 குழந்தைகளின் கல்வி தடைபட்ட நிலையில், அவர்களை பள்ளியில் சேர்த்து, அந்த குடும்பத்துக்கு வெளிச்சத்தை ஏற்றி வைத்துள்ளனர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர்.. அதிரடி நடவடிக்கையும், தாயுள்ளம் கொண்ட செயலும், வால்பாறை மலைவாழ் மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது...!!


Click it and Unblock the Notifications
