டூர் போனதுக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்! சோறு தண்ணி இல்லாமல் தவிக்கும் டூரிஸ்ட்ஸ்! என்னாச்சு?
கோவை: கோவை மாவட்டத்தில் கனமழையால் வால்பாறை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று இரவு விழுந்த மிகப்பெரிய இரண்டு ராட்சச பாறைகளால் 14 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறைக்காக சுற்றுலா சென்ற பயணிகள், பாதி வழியில் சிக்கிக் கொண்டதால், உணவு தண்ணீர் இல்லாமல் தவிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலை சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் திடீரென மிகப்பெரிய இரண்டு ராட்சச பாறைகள் சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஆழியார் வன சோதனை சாவடியில் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களை அட்டகட்டி பகுதியிலேயே வனத்துறையினர் நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் மிகப்பெரிய இரண்டு ராட்சச பாறைகள் விழுந்ததால் தார் சாலையை இரண்டாக பிளந்து காணப்படுவதாலும், மிகப்பெரிய பாறை என்பதால் பாறைகளை அகற்ற முடியாமல் நெடுஞ்சாலைத்துறையினர் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றன. இதனால் ஆழியார் வால்பாறை சாலையில் 14 மணி நேரத்துக்கு மேலாக தற்பொழுது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாறையை வெடிவைத்து மட்டுமே உடைத்து எடுக்க முடியும் என அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
நேற்று இரவு முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, வருவாய்த்துறையினர் பொக்லின் இயந்திரம் கொண்டு பாறைகளை அகற்ற இரவு முழுவதும் முயற்சி செய்தனர். முயற்சி தோல்வி அடைந்ததால் காலையில் கம்பரசர் மூலம் துளையிட்டு வெடிவைத்து பாறைகளை துண்டு துண்டாக எடுத்து சாலையை சீரமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தாலும் போக்குவரத்து சீராக செல்ல இன்று மதியம் 12 மணிக்கு மேல ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் பசியுடன் இருப்பதாகவும், ஆகையால் தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணனிடம் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிகப்பெரிய பாறை விழுந்ததால் தற்பொழுது 14 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
