முதல்வருக்கு விபரம் தெரியவில்லை.. கண்ணை திறந்து பாருங்க ஸ்டாலின்.. வானதி சீனிவாசன்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக இளைஞரணி கூட்டம், அமித்ஷா விசிட் என்று பல முக்கிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு, வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி போன்றவை தொடர்பாக திமுவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். நடிகர்களை மிரட்டி அழைத்து வந்து பாராட்ட வைப்பது கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. என்று அவர் கூறியுள்ளார்.
கோவை பாஜக சார்பில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இதே கோவை தெற்கு தொகுதி தான் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை அரசியல் களத்தில் காணாமல் போக செய்தது. மேலும் திமுகவின் கள்ள ஓட்டு முயற்சிகளை பாஜக கடுமையாக எதிர்க்கிறது என்றார்.
அனைத்து துறைகளிலும் ஊழல்
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "திமுக ஒருபக்கம் எஸ்ஐஆர் பணியை எதிர்ப்பது போல நாடகமாடுகிறார்கள். மறுபக்கம் அவர்கள் ஆளுங்கட்சி என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகள், பிஎல்ஓக்களை மிரட்டுகின்றனர். தவறுதலாக வாக்காளர்களை இணைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இவற்றை எல்லாம் எச்சரிக்கையாக கண்காணித்து சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்,
அமைச்சர் கே.என். நேரு மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் பரவிக் கிடக்கிறது. முதலமைச்சர் தன் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்ற மனநிலையில் இருக்கிறார். அவர் விவரம் தெரியாமல் இருக்கிறார். அவருக்கு கீழ் இருக்கிற அமைச்சர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று கூட தெரியாமல் உள்ளார்.
மக்கள் பதிலடி
சிறை சென்ற வந்தவர்களை எல்லாம் எதற்காக அமைச்சரவையில் வைத்திருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்களை அமைச்சராக வைத்திருப்பது நேர்மையான அரசா. திமுகவுக்கும் நேர்மைக்கும் என்றைக்காவது சம்மந்தம் இருக்கிறதா. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் பணம் வாங்கி பணி நிரப்பியதை ஒப்புக் கொண்டார். திடீரென அவர் தியாகி ஆகிவிட்டார். காரணம் அவர் அதிகமாக கொடுக்கிறார்.
அவர்கள் மீது எல்லாம் குற்ற வழக்கு இல்லை என்று சொல்ல முடியுமா. இதையெல்லாம் பொய் வழக்கு என்று சொன்னால் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. கரூர் சென்று அவர் செய்த தவறுகளை பக்கம் பக்கமாக படித்தவரே முதலமைச்சர் தான். அப்படிப்பட்டவர்களுக்கு தற்போது அவரே வக்காலத்து வாங்குகிறார். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
நடிகர்களுக்கு மிரட்டல்
இவ்வளவு குற்றச்சாட்டுகள் உள்ளவரை அமைச்சரவையில் தொடர வைப்பதன் மூலம் திமுக அரசு அந்த ஊழலை ஆதரிக்கிறார்கள் என்று தானே அர்த்தம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. அதனால் பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று பார்ப்பார்கள். வெல்லும் பெண்கள் என்கிற பெயரில் ஒரு மாநாட்டை சென்னையில் நடத்தியுள்ளனர். டிராமா மாடலுக்கு அரசு பணத்தை செலவு செய்துள்ளனர்.
திமுக நாடகம் நடத்தி, மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக அரசை பாராட்ட வைக்கிறார்கள். இந்த மிரட்டல் எல்லாம் திமுகவுக்கு புதிதல்ல, இதற்கு முன்பும் இதே போல நடந்துள்ளது. அதைத் தற்போதும் தொடர்கின்றனர். "என்றார்.












Click it and Unblock the Notifications