திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!
கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இப்போதே யார் மேயர் என்பதை அடையாளம் காணும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன.
அங்கு திமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் அக்கட்சியில் யாருக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தற்போதைய சூழலில் கோவை மேயர் பதவிக்கான போட்டியில் திமுகவில் 3 முக்கியப் பெண் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போதே ஒவ்வொரு மாநகராட்சியிலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை வைத்தே யார் மேயராக வரக்கூடும் என அரசியல் நோக்கர்களும், உள்ளூர் கட்சிக்காரர்களும் கணிக்கத் தொடங்கிவிட்டனர்.

மீனா லோகு
அந்த வகையில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சியாக திகழும் கோவை மாநகராட்சியில் யார் மேயராக வரக் கூடும் எனவும் பேசத் தொடங்கிவிட்டனர். ஆளுங்கட்சியான திமுகவில் மேயர் பதவிக்கான போட்டியில் 3 பேர் இருக்கிறார்கள். 46-வது வார்டில் போட்டியிடக் கூடிய மீனா லோகு ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக இருந்தவர், ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். இதனால் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் இவரது பெயரும் மேயர் பதவிக்கான பரிசீலனையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

கார்த்திக் மனைவி
இதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் பிரதான இடத்தில் இருக்கிறார். கார்த்திக் ஏற்கனவே கோவை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மகேந்திரனால் தனது வெற்றிவாய்ப்பை சிங்காநல்லூரில் இழந்த கார்த்திக், அமைச்சராகும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இந்நிலையில் இந்த முறை தனது மனைவி இளஞ்செல்வியை கோவை மேயராக்குவது என்ற தீர்மானத்தோடு காய் நகர்த்தி வருகிறார்.

நிவேதா சேனாதிபதி
மேற்கண்ட இருவருக்கும் சற்றும் சளைக்காமல் 22 வயதே ஆன இளம் பெண் ஒருவரும் கோவை மேயர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி 97-வது வார்டில் போட்டியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் சிபாரிசு மூலம் தனது மகளை மேயராக்க மருதமலை சேனாதிபதி தனது பங்குக்கு அரசியல் காய் நகர்த்த தொடங்கிவிட்டார்.

முதல்வர் தேர்வு
இதனிடையே இப்போது யார் எப்படி அரசியல் காய் நகர்த்தினாலும் 22-ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அடையாளம் காட்டக் கூடிய மாமன்ற உறுப்பினர் ஒருவரே மேயராக முடியும் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். கோவைக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு மேயரை தேர்வு செய்வார் எனத் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications