களேபரமான கோவை.. போலீசாருடன் இரவில் மல்லுக்கட்டியது ஏன்? அண்ணாமலை பரபரப்பான விளக்கம்
கோவை: கோவையில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் கோவை போலீசாருடன் வாக்குவாதம் ஏன்? இரவில் என்ன நடந்தது? என்பது பற்றி அண்ணாமலை பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று இரவு கோவையில் பல இடங்களில் அண்ணாமலை பிரசாரம் செய்தார். இரவு 10 மணி வரை தான் வேட்பாளர்கள், தலைவர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு பிரசாரம் செய்தால் அது தேர்தல் விதிமீறலாகும். சம்பந்தப்பட்ட வேட்பாளர், பிரசாரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்படும். இந்நிலையில் தான் நேற்று கோவை சூலூரில் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் காரில் பயணித்தனர்.

அப்போது நேரம் இரவு 10 மணியை தாண்டியிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு சென்ற போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்தது நிறுத்தினர். இரவில் மணி 10யை தாண்டியதால் பிரசாரம் செய்ய அனுமதியில்லை எனக்கூறினர். அப்போது அண்ணாமலை தான் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தான் செல்கிறேன் என தெரிவித்தார்.
ஆனால் போலீசார் மாற்றுப்பாதையில் செல்ல அவரை அறிவுறுத்தினர். இதனால் அண்ணாமலை ஆக்ரோஷமானார். போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். பிரசாரம் செய்யாத நிலையில் போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 1 மணிநேரம் வரை சூலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை போலீசார் நிறுத்தினர். இதன்மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். அப்போது நாங்கள் பிரசாரம் எதுவும் செய்வில்லை என்று கூறினோம்.
வாகனங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. பிரசாரம் செய்யவில்லை என்று கூறினோம். வாகனம் செல்லும் பாதையில் 2000 பாஜக தொண்டர்களை தான் கடந்து செல்ல உள்ளோம் என்றோம். ஆனால் போலீசாரின் செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதுபற்றி போலீசிடம் விளக்கியும் கூட அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி கூறினார்கள். ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் தேர்தலில் 3 ஆண்டு காலமாக தவறான ஆட்சி வழங்கி வரும் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவார்கள்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications