டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது ஏன்? மனைவி, மகளிடம் போலீசார் விசாரணை!
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த விஜயகுமாரின் மனைவி, மகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை சரக டி.ஐ.ஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென, பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றது. கோட்டாட்சியர், தடயவியல் துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது.

தற்கொலைக்கு காரணம்: உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல், சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார்.
தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ எதுவும் இல்லை. மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை. டிஐஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். ஐஜி சுதாகர், கோவை எஸ்.பி போன்ற அதிகாரிகளுடன் விஜயகுமார் சிகிச்சைக்காக ஆலோசித்துள்ளார் என்று கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.
மனைவி - மகள்: தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். டிஐஜி விஜயகுமாரின் மனைவி கீதா வாணி மருத்துவராக உள்ளார். மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரிடமும் விசாரணை: இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி விஜயகுமாரின் மனைவி, மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் அளித்துள்ளார். நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கப்பட்டுள்ளார். மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜய்குமார் எடுத்துள்ளார்.
அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பிரச்சினை என்பதால் அதனை போலீஸ் தலையிட முடியாது எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications