ஈரோடு கணேசமூர்த்தி எம்பி தற்கொலை முயற்சிக்கு காரணமே மதிமுக தலைமை எடுத்த 'அந்த ஒற்றை' முடிவுதானா?
கோவை: மதிமுகவின் சிட்டிங் எம்பி ஈரோடு கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கு காரணமே லோக்சபா தேர்தல் தொடர்பாக அக்கட்சித் தலைமை எடுத்த முடிவுதான் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. தமிழ்நாடு சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர். அப்போது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் கணேசமூர்த்தி.

மதிமுக தொடங்கப்பட்ட போது ஏராளமான திமுக பெருந்தலைகள் அக்கட்சியில் இருந்தனர். ஆனால் அனைவருமே அடுத்தடுத்து மதிமுகவை விட்டே வெளியேறிவிட்டனர். மதிமுகவில் எஞ்சி இருப்பது கணேசமூர்த்தி போன்ற ஒருசிலர்தான்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிக்கும் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி மறுக்கப்பட்டது. மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியாக திருச்சி தொகுதிதான் ஒதுக்கப்பட்டது. ஈரோடு லோக்சபா தொகுதி தமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக எந்த வருத்தத்தையும் கணேசமூர்த்தி எம்பி வெளிப்படுத்தவும் இல்லையாம்.
அதேநேரத்தில் லோக்சபா தேர்தலில் மதிமுக திருச்சியில் போட்டியிடுவது என முடிவெடுத்தது. ஆனால் மதிமுகவின் திருச்சி வேட்பாளர் யார் என்பதில்தான் அக்கட்சிக்குள் விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திருச்சி மதிமுக வேட்பாளர் யார் என்பது தொடர்பாக வாக்கெடுப்பு கூட நடத்தினோம் என்றார்.
மதிமுகவில் 30 ஆண்டுகாலம் உழைத்தவர்களுக்குதான் முன்னுரிமை தர வேண்டும் ; தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்பதுதான் கணேசமூர்த்தியின் நிலைப்பாடாக இருந்துள்ளது. இதனையே தமது கட்சித் தலைமைக்கும் மிக அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறியிருக்கிறார். ஆனால் மதிமுக தலைமை வேறு ஒரு முடிவை எடுத்து அறிவித்தது.
மதிமுக தலைமை எடுத்த அந்த ஒற்றை முடிவுதான் ஈரோடு கணேசமூர்த்தி எம்பியை நிலைகுலைய செய்துவிட்டதாம். அவரை விரக்தி நிலைக்குத் தள்ளிவிட்டதாம். இதனாலேயே தற்கொலைக்கு முயற்சித்தார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். ஈரோடு கணேசமூர்த்தி போன்ற சீனியர்களுக்கே இந்த நிலை என்பதால் அவரது ஆதரவாளர்கள் பலரும் மதிமுக தலைமை மீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கின்றனராம்.. தற்போதைக்கு மவுனம் காத்தாலும் தேர்தலுக்கு பின்னர் மதிமுகவை விட்டு எஞ்சியிருக்கும் பலரும் வெளியேறுவது உறுதியாக நடக்கும் எனவும் ஈரோடு மாவட்ட மதிமுகவினர் திட்டவட்டமாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications