கோவையில் உண்மையில் ஜாதி ரீதியாகத்தான் வாக்களிப்பார்களா? நிஜமான மனநிலையே வேறு! களநிலவரம்!
கோவை: கோவையில் மக்கள் சாதி ரீதியாக வாக்களிப்பார்கள், அங்கே ஜாதி, மத ரீதியாக வாக்குகள் பிரியும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் அது நிதர்சனமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.
கள நிலவரம்: கோவையில் மக்கள் சாதி ரீதியாக வாக்களிப்பார்கள், அங்கே ஜாதி, மத ரீதியாக வாக்குகள் பிரியும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் அது நிதர்சனமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவையில் களத்தில் மக்களிடையே பேசியதில், கோவை மக்கள் ஜாதி ரீதியாக மட்டுமே வாக்களிக்க மாட்டார்கள். எல்லா மாவட்டங்களில் ஜாதி பார்ப்பார்கள். உதாரணமாக வடக்கு மாவட்டங்களில் வன்னியர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினருக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டாவில் வன்னியர்கள், முக்குலத்தோர்கள் அதிகம் உள்ளனர். தெற்கில் முக்குலத்தோர் அதிகம் உள்ளனர். அதே அளவுதான் மேற்கு மண்டலத்தில் கவுண்டர்கள் உள்ளனர். பல வகை பிரிவு கவுண்டர்கள் இங்கே உள்ளனர். இவர்கள் எல்லாம் கவுண்டர்களுக்காகவே வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
உதாரணமாக இங்கே இரண்டு முறை 2009. 2019ல் சிபிஎம் பிஆர் நடராஜன் வென்றார். இவர் அங்கே உள்ள ஆதிக்க ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர் இல்லை. ஆனாலும் மக்கள் இங்கே இவர்களை ஜெயிக்க வைத்தனர். அப்படி இருக்க இது ஜாதி பூமி என்று எப்படி சொல்ல முடியும்.
சிபிஎம் தீவிரமாக ஜாதி மறுப்பு பேசும் நபர்கள், முற்போக்காக பேசுபவர்கள். அவர்கள் தைரியமாக நிற்கும் இடங்களில் கோவை ஒன்று. இந்த முறை இங்கே திமுக நின்றாலும் திமுகவிற்கு பின் சிபிஎம் வாக்கு வங்கி சாதகமாக இருக்கும், என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதம் - ஜாதி: இங்கே குண்டுவெடிப்பிற்கு பின் 1998ல் பாஜக வென்றது , அதன்பின் மீண்டும் பாஜக வென்றது. சிபி ராதாகிருஷ்ணன் வென்ற இந்த இரண்டு முறையை தவிர பாஜக அங்கே வென்றதே இல்லை. அப்படி இருக்க மத ரீதியான வாக்காளர்கள் அதிகம் என்றும் அப்படியே முடிவிற்கு வந்துவிட முடியும்.
இந்த இரண்டு முறையை தவிர மற்ற தேர்தல்களில் இங்கே 3 முறை காங்கிரஸ், 3 முறை சிபிஐ, 3 முறை சிபிஎம், 1 முறை அதிமுக , 2 முறை திமுக வென்றுள்ளது. அப்படி இருக்க இது பாஜகவின் கோட்டை என்று சொல்வதும், மத - ஜாதி ரீதியிலான பிளவு உள்ள பூமி என்று சொல்வதையும் "டேட்டா" ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜாதி இருக்கு: அதிலும் கோவை சிட்டி உள்ளே இருக்கும் தொகுதிகள்தான் 60 சதவிகித முடிவுகளை தீர்மானிக்கின்றன. மீதம் இருப்பது என்னவோ பல்லடம், சூளூர் கிராமங்களில் உள்ள 40 சதவிகித வாக்குகள்தான்.
இந்த பகுதிகள்தான் கொஞ்சம் சாதி ரீதியிலான வாக்குகள் உள்ள இடம். இதை வைத்து மொத்த கோயம்புத்தூர் மாவட்டத்தை ஜாதி ரீதியிலான இடம் என்று சொல்ல முடியாது. இந்த கணக்கை எடுத்தால் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களும் கிட்டத்தட்ட இதே பின்புலத்தை கொண்டவைதான்.
அங்கே தற்போது நிலவரம்; அங்கே கொஞ்சம் அதிமுக - திமுக கை ஓங்கி உள்ளது. முக்கியமாக வேலுமணி நேரடியாக களத்தில் இறங்கி தனது பழைய ஸ்டைலில் பணிகளை செய்வது அதிமுகவிற்கு சாதகமாக அலையை திருப்ப தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் இந்த தேர்தலை அதிமுக நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளது.
அண்ணாமலைக்கு சாதகம் என்றால்.. பாஜகவிற்கு சாதகமாக உள்ள 2-3 சதவிகித உறுதியான வலதுசாரி வாக்குகள். சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஒரு காலத்தில் வந்த வாக்குகள், வானதிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வந்த வாக்குகள் ஆகிய வாக்குகளை வைத்து அண்ணாமலைக்கு கொஞ்சம் சாதகமான சூழல் உள்ளது.
கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வருகிறார். இங்கே நேரடியாக டிஆர்பி ராஜா களமிறங்கி மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார். அங்கே திமுக நிர்வாகிகள் இடையே இது ஒரு வித ஒற்றுமையை புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும் என்பதை குறி வைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications