கொழும்பு இந்திய தூதரக விசா மையம் மூடல்- கம்ப்யூட்டர்களை குறிவைத்த வெளிநாட்டு உளவு ஏஜெண்ட்டுகள்?
கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் செயல்பட்டு வந்த இந்திய தூதரக விசா மையம் திடீரென மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த விசா மையத்துக்குள் நுழைய மர்ம நபர்கள் கம்ப்யூட்டர்களை இலக்கு வைத்திருப்பதன் பின்னணி என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கை தலைநகர் கொழும்பில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது; யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் தாயக பிரதேசமான கிழக்கு மாகாணத்திலும் ஒரு துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை.

கொழும்பு இந்திய தூதரகத்தின் விசா மையமாக ஐவிஎஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த ஐவிஎஸ் நிறுவனமானது மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான விசா தேவைப்படுவோர் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழருக்கு தனிநாடு கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு அழிக்கப்பட்டது. பின்னர் அண்மை காலமாக ஈழத் தமிழருக்கு அரசியல் அதிகாரம் வழங்கக் கூடிய 13-வது பிரிவை செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன், எல்.முருகன் இலங்கை பயணம் சென்று வந்தனர்.
இந்த பயணங்களைத் தொடர்ந்து திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழ்நாட்டில் இருந்து அறிவிப்பு வெளியானது. இது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல இலங்கையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை அரசியல் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள் திட்டவட்டமாக பிரபாகரன் உயிருடனேயே இல்லை என கூறுகின்றனர்.

அதேநேரத்தில் வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருக்கும் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் இயக்கம் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காகவே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற தகவல் வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தின் விசா மையம் மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இந்திய தூதரகத்தின் விசா வழங்கும் சேவையை மேற்கொண்டிருந்த ஐவிஎல் நிறுவனத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர்களை இலக்கு வைத்துள்ளனர். இந்த முயற்சிகளில் கம்ப்யூட்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு மீறல்கள் நடந்ததால் மறு அறிவித்தல் வரும் வரை இந்த விசா மையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பினர் யாரேனும் இந்திய விசா மையத்துக்குள் நுழைந்து ரகசிய ஆவணங்களை கைப்பற்றினரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. உளவு மற்றும் அரசியல் சார் திரைப்படங்களில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையில் கொழும்பில் இந்திய தூதரகத்தின் விசா மையம் குறிவைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications