தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சேவுக்கு மக்கள் வலிமை புரிந்திருக்கும்: ஜே.வி.பி. ரில்வின் சில்வா விளாசல்
கொழும்பு: ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சேவுக்கு மக்கள் வலிமை என்ன என்பது இப்போதாவது புரிந்திருக்கும் என்று ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் ரில்வின் சில்வா அளித்த பேட்டி: பல மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்களின் குரலை கோத்தபாய ராஜபக்ச புரிந்து கொள்ளவில்லை. அவரின் இராணுவ பலத்தை விட மக்கள் சக்திதான் அதிக சக்தி வாய்ந்தது, முக்கியமானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதனை தற்போது அவரும் புரிந்து கொண்டு இருப்பார்.

தப்பி ஓடிய கோத்தபாய
பிடிவாதமாக ஆட்சியில் இருக்க முயற்சித்த கோத்தபாய ராஜபக்ச, ஆட்சியை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. மரியாதையாக வெளியேற வேண்டியவர், பின் கதவால் வெளியேறி, ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அவர் எங்கே இருக்கின்றார் என்பது யாருக்கும் தெரியாது. கோத்தபாய அவ்வாறு நடந்து கொள்ளாமல் மரியாதையுடன் சீக்கிரமாக வெளியேறி இருந்தால் சமுதாயத்தில் ஒரு நற்பெயரை வைத்திருந்திருப்பார். இந்தப் போர் தொடங்கியபோது இவர்கள்தான் ஆட்சியாளர்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலக வேண்டியதாயிற்று. அவர் வகித்து வந்த பிற அமைச்சுப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டியதாயிற்று. பசில் ராஜபக்ச அமைச்சர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் விட்டு விலக வேண்டியதாயிற்று.

இன்னும் பிரச்சனைகள்
இறுதியில், கோத்தபாய ராஜபக்ச அரச தலைவர் மாளிகையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. எதிர்வரும் 13 ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வமாக பதவி விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். போர் வெற்றிகளைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் கட்டியெழுப்பிய சம்ராஜ்யம் இதன் மூலம் முடிவுக்கு வந்திருகின்றது. தற்போது எமது நாட்டுக்கு முன்பாக பல கடுமையான சவால்கள் உள்ளன. எண்ணெய் பிரச்சனை, எரிவாயு பிரச்சனை, பொருட்கள் தட்டுப்பாடு, வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் இன்னும் உள்ளன.

புதிய அரசு
கோத்தபாய ராஜபக்சவை வெளியேற்றினால் மட்டும் எமது நாடு எதிர்நோக்கும் பாரிய சமூக, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வது சாத்தியமில்லை. நாடு மீண்டு வர வேண்டுமாயின், ஆணைப்படி புதிய அரசாங்கம் அமைக்கப்படல் வேண்டும். கோத்தபாய ராஜபக்சவின் பதவி விலகலுக்குப் பின்னரான சூழலைப் பயன்படுத்தி தமது பழைய குழுக்களை மீண்டும் நிலை நிறுத்தி அதிகாரத்தைத் தமது கைகளில் எடுக்க சிலர் கனவு காண்கின்றனர்.

இறுதிப் போரும் வெற்றியும்
மோசடி ஆட்சியை முன்னர் புரிந்தவர்கள் பிரதமர் கனவை, அரச தலைவர் கனவை பிடித்து, அமைச்சர் பதவிகளை பிடிக்க முயற்சிக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சவை அகற்ற வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முழக்கமாக இருந்தாலும், 74 ஆண்டுகளாகப் பேணப்பட்டு வந்த தவறான பொருளாதார அமைப்பையும் கொடுங்கோல் அரசியலையும் இல்லாதொழிக்க விரிவான மாற்றம் வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அந்தப் போரில் மக்கள் இருந்தனர். தேர்தலின் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் புதிய அரசாங்கத்தின் மூலம் இந்தப் போரை இறுதி வெற்றியாக மாற்ற முடியும் என்பதை அனைவரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு ரில்வின் சில்வா கூறினார்.












Click it and Unblock the Notifications