ஓட்டம் பிடித்த கோத்தபய.. மாளிகையில் இருந்த அதிபர் கொடி அகற்றம்.. இலங்கை கொடி ஏற்றம்
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து கொழும்புவில் இருந்த அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அங்கிருந்து அதிபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த அதிபரின் கொடி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக இலங்கை கொடி ஏற்றப்பட்டது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்ற மகிந்த ராஜபக்சவை மக்கள் விரட்டியடித்தனர்.

மகிந்த ராஜபக்ச
விட்டால் போதும் என்ற நிலையில் மகிந்த ராஜபக்ச தப்பியோடினார். இதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல சில முயற்சிகளை எடுத்தார். எனினும் பெரிய அளவில் அதற்கு பலன் ஏதும் இல்லை.

மின்வெட்டு
இதனால் மின்வெட்டு, பசி, பட்டினி, உள்ளிட்ட சூழல்களை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்த மக்கள் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் தனது சகோதரனை போல அவரும் அடம்பிடித்தார். இந்த நிலையில்தான் பொதுமக்கள் அதிபர் மாளிகைக்குள் சென்றனர்.

முற்றுகை
அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்ற ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய நிலையிலும் எப்படியோ அதிபர் மாளிகை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு சென்று கோத்தபய ராஜபக்சவை தேடினார்.

கொடி ஏற்றம் இறக்கம்
இதையடுத்து அவர் நீச்சல் குளத்தில் மறைந்திருக்க கூடும் என நினைத்து அவர்கள் அங்கும் தேடினர். இந்த நிலையில் அவர் கடற்படை கப்பல் மூலம் தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை கண்டியிலும் மக்கள் தேடி வருகிறார்கள். இதையடுத்து அதிபர் மாளிகையில் இருந்த அதிபர் கொடியை அகற்றிய அவர்கள், இலங்கை கொடியை ஏற்றினர். இலங்கையில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில் அவசர கூட்டத்திற்கு பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications