லெஸ்பியன் காதலியை திருமணம் செய்ய நாடு விட்டு நாடு போன தமிழகப் பெண்- விடுதலை செய்தது இலங்கை கோர்ட்!
கொழும்பு: தமது லெஸ்பியன் காதலியை திருணம் செய்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த இளம்பெண் அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதான பட்டதாரி பெண் ஒருவருக்கு இலங்கை நண்பர் ஒருவர் மூலமாக இலங்கையின் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது.

குழந்தையின் தாய்க்கு காதல்
நாடு விட்டு நாடு இரு பெண்களும் சமூக வலைதளம் மற்றும் தொலைபேசி மூலமாக நட்பு பாராட்டி வந்தனர். இந்த நட்பு காதலாகவும் மலர்ந்தது. இலங்கை பெண்ணுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. அவரது கணவர் வளைகுடா நாட்டில் பணி செய்து வருகிறார்.

திருமண தவிப்பு
தமிழகத்தின் குன்னத்தூர் பெண்ணும் இலங்கையின் ஒன்றரை வயது குழந்தையின் தாய்க்குமான இந்த காதல் பந்தம் திருமணம் நோக்கி சென்றது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இலங்கை பெண்ணால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இதையடுத்து தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு காதலியை தேடி சென்றார் பட்டதாரி பெண். அந்த பெண்ணின் பெற்றோரிடம், திருமணம் குறித்தும் பேசியிருக்கிறார் தமிழகப் பெண். அப்படி தங்களுக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் எனவும் இருவரும் மிரட்டி உள்ளனர்.

இலங்கையில் கைது
இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இலங்கை அக்கரைப்பற்று போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து இரு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இருவரும் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கல்முனை மருத்துவமனையில் இரு பெண்களுக்கும் மனநல மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Recommended Video

தமிழகப் பெண் விடுதலை
இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, இலங்கை பெண்ணை ரூ1 லட்சம் சொந்த ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி ஹம்ஸா உத்தரவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை இலங்கையில் இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்து தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி ஹம்ஸா, தமிழகப் பெண்ணை விடுதலை செய்து உத்தரவிட்டார். தமிழகப் பெண்ணுக்காக மட்டக்களப்பு வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கில் நாளையும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications