கொரோனாவால் இலங்கை மாஜி வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மரணம்- 'ராஜபக்சேக்களுக்கு எதிரான கலகக் குரல்'
கொழும்பு: இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர (வயது 65) கொரோனாவால் மரணமடைந்தார். தன் கடைசி காலங்களில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராகவும் பவுத்த பிக்குகளின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராகவும் கலகக் குரல் எழுப்பி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மங்கள சமரவீர.
சிங்கள மக்களிடையே இடதுசாரி சித்தாந்தங்களை விதைத்தவர்களில் மஹாநாம சமரவீரவும் ஒருவர். மஹாநாம சமரவீர- ஹேமா சமரவீர ஆகியோரின் மகனாக 1956-ல் பிறந்தவர் மங்கள சமரவீர. இவரது தாயார் ஹேமா, சண்டே அப்சர்வர் பத்திரிகையின் செயலாளராகவும் இருந்தார். 1983-ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை அமைப்பாளர் என்ற பதவியுடன் அரசியலில் நுழைந்தார் மங்கள சமரவீர.
பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராக உயர்ந்தார். 1989-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மங்கள. 1994-ல் அதிபராக இருந்த சந்திரிகா குமாரதுங்க அரசில் தபால், தொலைத் தொடர்புகள் துறை அமைச்சராக பணியாற்றினார்.

ராஜபக்சே ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர்
2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் மங்கள. இதனையடுத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியோடு கை கோர்த்தார் மங்கள. 2015-ல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசிலும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார் மங்கள.

ராஜபக்சே எதிர்முகாம்
இலங்கை பேரினவாத கட்சி அரசுகளில் பங்கேற்றவராக இருந்தாலும் மங்கள சமரவீர, தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர். பேரினவாத கோட்பாட்டை மட்டுமே நம்புகிற மகிந்த ராஜபக்சே சகோதரர்களுக்கு சிம்ம சொப்பனமாக தன் வாழ்நாள் இறுதிக் காலங்களில் திகழ்ந்தவர். 2015-ல் ரணில் விக்கிரமசிங்கே- மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் முடிவுக்கு காரணமாக இருந்தவரும் மங்கள சமரவீர.

தமிழருக்கு ஆதரவு குரல்
அப்போது, 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவோம் என முழங்கியவர் மங்கள சமரவீர. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார். ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுதந்திரம்- சமத்துவம்- மனித உரிமைகளுக்காக முன்னின்று செயல்பட்டவர் மங்கள சமரவீர. அனைத்து தரப்பிலும் நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பியவர் என புகழஞ்சலி செலுத்தி உள்ளார். மங்கள சமரவீர மறைவுக்கு அனைத்து தமிழர் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் கட்சி தலைவர்கள் இரங்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யான சுமந்திரன் தமது இரங்கல் செய்தியில், 2005-ல் வெளியுறவு அமைச்சராக இருந்த போது ராஜபக்சேவுக்கு, போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் என்றாலும் நீங்கள் கையாளும் முறையில் உடன்பாடு இல்லை என பகிரங்கமாக கடிதம் அனுப்பியவர் மங்கள சமரவீர. இதனாலேயே வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை இழந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவர் மங்கள சமரவீர என குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவர் மங்கள சமரவீர என இந்திய வம்சாவளித் தமிழ் எம்.பி.யான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பேரினவாத சேற்றில் மலர்ந்த வெண்தாமரை
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் எம்.பி, இலங்கையை பல்லின, பன்மத பல்மொழி நாடாக கருதி செயற்பட்ட சிங்கள சகோதரத் தலைவர் என புகழஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டதால் பேரினவாத சேற்றில் மலர்ந்த வெண்தாமரை மங்கள சமரவீர என அஞ்சலி செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் உறவினர்
கொரோனாவால் மறைந்த மங்கள சமரவீர, உலகப் புகழ் பெற்ற 7 கின்னஸ் சாதனைகள் படைத்த நீச்சல் வீரரான 'ஆழிக்குமரன் 'என்ற வி.எஸ். ஆனந்தனின் மிக நெருங்கிய உறவினரும் ஆவார். 1954-ல் பாக்ஜலசந்தியை கடந்தவர்; 1975-ல் மன்னார்- தனுஷ்கோடி; தனுஷ்கோடி- மன்னார் என நீந்தி சாதனை படைத்தவர் வி.எஸ். ஆனந்தன் என்ற ஆழிக்குமரன் ஆனந்தன். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தன். 1984-ல் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த போது கடுங்குளிரால் மரணம் அடைந்தார். ஆனந்தனின் மனைவி, மங்கள சமரவீர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications