மக்கள் போராட்டம் உச்சகட்டம்! கப்பலில் வெளிநாடு தப்பிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச.. பரபர படங்கள்
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இலங்கை நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. போர் தொடங்கி இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மின்சாரம் என பல்வேறு விஷயங்களுக்கு அங்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை
இதற்குக் காரணம் ஆளும் ராஜபக்ச தரப்பு தான் என்பதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அதன் பின்னர் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. முதலில் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று அடம்பிடித்த மகிந்த ராஜபக்ச, மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி பதவி விலகினார்.

புதிய பிரதமர்
இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றதும் நிலைமையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசு எடுத்தது. இருப்பினும், எதற்கும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இலங்கையில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

கொந்தளிப்பு
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த மக்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மாட்டேன் என்றே தொடர்ந்து கூறி வந்தார். இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் கையை மீறிச் சென்றது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர்.

உளவுத் துறை
மக்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், நேற்று இரவே கோட்டாபய ராஜபக்ச ராணுவ தளத்தில் தஞ்சம் புகுந்ததாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, அவர் ஜீப் மூலம் தப்பிச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

கப்பல்
இதற்கிடையே அவர் இன்று பதவி விலக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் கோட்டாபய ராஜபக்ச கப்பல் மூலம் தப்பிச் செல்ல தயாராகும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வார் என்று கூறப்படுகிறது. அவர் எங்கே தப்பிச் செல்ல உள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications