மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே- 'தலைமறைவு' மகிந்த ராஜபக்சே ட்விட்டரில் வாழ்த்து!
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று மாலை பதவியேற்றார். இலங்கையின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருக்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியில் இறங்கியதால் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே. அத்துடன் கொழும்பில் இருந்து தப்பி ஓடி திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரும் கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதனை மடைமாற்றும் வகையில் புதிய பிரதமர் நியமனம், புதிய அமைச்சரவை நியமனம் குறித்து வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் கோத்தபாய ராஜபக்சே.

ரணில் பதவியேற்பு
மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா என பலரையும் அழைத்து கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று மாலை பதவியேற்றார்.

150 எம்.பிக்கள் ஆதரவு
இன்று மாலை ரணில் விக்கிரமசிங்கே மட்டும் பதவியேற்றார்; அதனைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் ரணில் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். தற்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு மொத்தம் 150க்கும் அதிகமான எம்.பிக்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

சஜித் கனவு நிராசை
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராக கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. அத்துடன் இலங்கைக்கான சீனாவின் தூதரும் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்கவைத்தான் பெரும்பாலான வெளிநாடுகள் பிரதமராக ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கோத்தபாய ராஜபக்சே ஒப்புக் கொண்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் தேர்வு ஏன்?
இலங்கை பிரதமர்களில் மகிந்த ராஜபக்சே கடும் போக்கானவராக இருந்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கே பேரினவாதத்தை உள்வைத்த மென்மைப் போக்கை கொண்டவராக இருந்தார். சர்வதேச நாடுகள் எதை விரும்புகிறதோ அதை செய்யக் கூடிய சொல்பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளையாக ஆட்சி நடத்தியவர்.இதனால்தான் இலங்கை தமிழர்களிடமும் கூட ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சற்று செல்வாக்கு இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் என இலங்கையில் ஆதிக்கம் செலுத்த தங்களது கைகளை உயர்த்த நினைக்கும் நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்கேதான் நல்ல தேர்வாக இருக்கிறது என்கின்றனர் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள். இதனை உணர்ந்து கொண்டுதான் சஜித் பிரேமதாசவை நேற்று வரை ஆதரித்த எம்.பிக்கள் கூட இன்று ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்போம் என அறிவித்திருக்கின்றனர் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மகிந்த ராஜபக்சே
இதனிடையே இலங்கை புரட்சிக்கு அஞ்சி கடற்படையிடம் தஞ்சம் அடைந்துள்ள மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கி இருக்கும் மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கேவை வாழ்த்தியுள்ளார்.

6-வது முறை பிரதமரான ரணில்
இலங்கை பிரதமராக தற்போது 6-வது முறை ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.
இதற்கு முன்னர் 1993-1994; 2001-2004 ஆண்டுகளில் பிரதமராக இருந்தார் ரணில். அப்போதுதான் 2002-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பின்னர் 2015-ல் 100 நாட்கள் பிரதமராக இருந்தார் ரணில். பின்னர் அதே 2015-ல் மீண்டும் பிரதமராகி 2018 வரை பதவியில் இருந்தார். 2018 முதல் 2019 வரை மீண்டும் பிரதமராக இருந்தார்.












Click it and Unblock the Notifications