நீளும் லிஸ்ட்.. இலங்கை மட்டுமில்லை.. இந்த 5 நாடுகளிலும் கடும் பொருளாதார நெருக்கடிதான்.. அதிர்ச்சி!
கொழும்பு: இலங்கை வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் வேறு சில நாடுகளும் இத்தகைய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலை உள்ளது. இதில் ரஷ்யா உள்பட பிற முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் கொரோனா காலத்தில் வருமானம் தடைப்பட்டது. இதனால் அந்நாடு அதிகளவில் கடன் வாங்கியது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது.
பிற நாட்டு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.

இலங்கை நிலவரம்
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன. அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைகள் எகிறியுள்ளன. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதோடு, மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா உள்பட சில நாடுகள் கடன் அளித்து வருகிறது. இதற்கிடையே இலங்கையில் உள்ள பொதுமக்கள் அகதிகளாக இந்தியா வருகின்றனர். குறிப்பாக இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகள்
இந்நிலையில் தான் இலங்கை சந்தித்து வருவது போன்று வேறுசில நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதில் ரஷ்யாவும் ஒரு நாடாக உள்ளது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் அந்தநாடு மீது விதிக்கப்பட்டு வரும் பொருளாதார தடைகள் தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ரஷ்யா தவிர ஆப்கானிஸ்தான், வெனிசுலா, சூடான், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த நாடுகள் ஏன் பொருளாதார சிக்கலை சந்திக்கும் என்பதற்கு சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. இதுபற்றிய முழுவிபரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து உலக நாடுகள் இன்று வரை ஆப்கானிஸ்தான் அரசை ஏற்று கொள்ளவில்லை. இதனால் அன்று முதல் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் சிரமத்தை சந்தித்து வருகிறது. உணவு பொருட்களுக்கான பற்றாக்குறை அங்கு நிலவுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கைப்படி மார்ச் 2022 வரை குறைந்தபட்சம் 55 சதவீத மக்கள் உணவு நெருக்கடியை சந்திக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. மேலும் நாள்தோறும் பசி, பட்டினி பிரச்சனை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் இறப்பு நிகழ்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா
வெனிசுலாவில் பல தசாப்தங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. உலக உணவு திட்டத்தின்(WFP)படி, ஒவ்வொரு மூன்று வெனிசுலா மக்களில் ஒருவர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதுடன், அவருக்கு அவரசமாக உணவு பொருள் வழங்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறுகிறது. இந்நிலையில் தான் கொரோனா பரவல் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் நசுக்கியுள்ளது. இதனால் எரிபொருள், மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் அங்கு சிரமம் ஏற்படவதுடன் கலவரங்களும் அவ்வப்போது நடக்கிறது. இதனால் வேறுவழியினறி ஏராளமானவர்கள் அங்கிருந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோது முதன்முறையாக நெருக்கடி தொடங்கியது. அதன்பிறகு அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவிற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பிய வேளையில் பொருளாதார எதிர்ப்பின் எழுச்சியுடன் மோசமடைந்தது. இன்னும் இதற்கு தீர்வு கிடைக்காமல் வெனிசுலா திணறி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகள்
இதற்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபைக் கூட்டங்களில் மத்திய கிழக்கு நாடுகளின் போர் தொடர்பான விவாதங்கள் தான் முன்னிலையில் இருந்து வந்தது. தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார நிலை இன்னும் மேம்பாடு அடையவில்லை. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மோசமடைந்துள்ளன. அதன்படி லெபனான், சிரியா, ஈராக், லிபியா, ஏமன் நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. இங்கு நிலவும் வறுமையால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். நாள்பட்ட போர் நடவடிக்கை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ஆகியவை தான் இந்த நாடுகளை பாதித்தன. மேலும் கொரோனா வைரசும் தன்பங்குக்கு அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள முடியாமல் நாடுகள் சிரமத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications