பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்.. பரவும் வீடியோ.. பதைபதைத்த பெற்றோர்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீப காலமாக பள்ளி மாணவ மாணவிகள் மது அருந்துவது உள்ளிட்ட வீடியோக்கள் வெளியாகி பெற்றோர்களின் மனதை ரணமாக்கி கொண்டு இருக்கிறது.
இது ஒருபக்கம் என்றால், அறியாத வயதில் காதல் என சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது என அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகி பெற்றோர்களை பதைபதைக்க வைக்கின்றன.

பள்ளி பருவத்தில் படிப்பில் மட்டுமே..
சினிமாவின் தாக்கத்தால் இத்தகைய போக்கு அதிகரித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பள்ளி பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெரியவர்கள் சொன்னாலும் தற்போதுள்ள சில 2 கே கிட்ஸ்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே சில வரம்பு மீறிய செயல்கள் நடந்து விடுகின்றன.

தாலி கட்டும் மாணவன்
அந்த வகையில்தான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் கருத்து
மாணவி 12 ஆம் வகுப்பும் தாலி கட்டிய மாணவர் தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. படிக்கும் வயதில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் அதை சமூக வலைத்தளங்களில் போடுவதும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் வீடியோ
இது ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் இந்த தாலி கட்டும் வீடியோ பரவி பெற்றோர்களை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், மாணவன் மாணவிக்கு தாலியை கட்ட... சுற்றி நிற்கும் சில மாணவர்கள் பூக்கள் போல எதையோ அவர்கள் மேல் வீசுகின்றனர். அங்கு நின்ற மாணவர்களே இதை வீடியோ எடுப்பது போல தெரிகிறது.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவ - மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற செயல்களில் விளையாட்டாக கூட ஈடுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications